நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
சபாநாயகர் கருஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீள் உருவாக வேண்டும் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக சபாநாயகரான நீங்கள் இந்த சபையில் தெரிவித்திருந்தீர்கள்.
அதன்படி சட்ட மா அதிபரினால் அது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டதா, வழங்கப்பட்டிருந்தால் அதனை எப்போது பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றீர்கள் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர், விடுதலைபுலிகளின் மீள் உருவாக்கம் குறித்து விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தாம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்ததாகவும் அதன் படி சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் சட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.