சகல செல்வமும் தரும் பூஜை வழிபாடுகள்..!

தானம் என்பது புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதாகும். கோ-பூஜையானது பலருடைய வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும் என்று செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக சாமியை தொட்டு பூஜை செய்து வரும் பூசாரிகள், தங்கள் வாழ்க்கை நடத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அவர்களின் பிரச்சினைகளுக்கு முடிவாக, வாழ்க்கைக்கு உதவியாக இருக்க வேண்டும் என கோ-தானம் வழங்கப்படுகிறது.

கோ-தானம் என்பது பசுவல்ல. காமதேனு, கேட்டதை எல்லாம் தருகின்ற தெய்வீக சக்தி உடைய மறுஉருவம். உடல் பசுவை போன்றும், முகம் தாய் போன்றும் காட்சி தருபவள் காமதேனு. தாய் போல் கருணை உடையவள் காமதேனு. தேவர்களும், அசுரர்களும் சாகா வரம் கிடைக்க வேண்டும் என்று அமிர்தம் கடைந்தபோது கடைசியில் கிடைத்தது காமதேனு.

மகா சக்தியின் மறு உருவம்தான் பசு. காமம் என்பது ஆசை. தேனு என்றால் நிறைவேற்றுபவள் என்று அர்த்தம். நாம் நினைக்கிற அனைத்தையும் நிவர்த்தி செய்பவள்தான் காமதேனு. கோமாதாவை வளர்க்கும்போது, அது நம்மை வளர்க்கும். தெய்வபலம் குறையும்போது கஷ்டங்கள் வரும். தெய்வத்தின் சக்தியும், அணுக்கிரகமும் இருக்கும்போது கஷ்டங்கள் மறைந்து விடும்.

கோமாதாவுக்கு பூஜை செய்யும் இடத்தில் சகல சந்தோஷங்கள் கிடைக்கும். கோமாதாவை ஆராதிக்கும்போது அனைத்து தேவதைகளும் சந்தோஷமாக இருக்கும். பசு, லட்சுமியாகவும் காட்சி தருகிறது. பசுவை பால் தரும் ஜீவனாக கருதாமல், நம்மை காப்பாற்ற வந்த தாய் என்று கருத வேண்டும். மகாலட்சுமியின் சொரூபம் என்று பசுக்களுக்கு பூஜை செய்ய வேண்டும். அவ்வாறாக தொடர்ந்து செய்தால் நமக்கு கடவுளின் அருளும், சகல செல்வமும் கிடைக்கும்.

நேரம் கிடைக்கும்போது அனைவரும் தாங்கள் வழிபடும் கோவிலில் வைத்து கோ-பூஜை செய்ய வேண்டும். அதேபோல் பசுவின் மகத்துவத்தை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.