முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா நடத்தும் கட்சி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை. இந்த கட்சியின் முக்கிய முடிவுகளை எடுத்துவந்த ஜெ.தீபாவின் வாகன ஓட்டுநர் ராஜாவை நீக்கி பொதுச் செயலாளர் தீபா உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக எனக்கு சொந்தம் உனக்கு சொந்தம் என அமைப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார். ஆனால், அமைப்பைத் தொடங்கிய அவர் முழுநேர அரசியலில் இல்லாமல் அவ்வப்போது பரபரப்பாக ஊடகங்களுக்கு செய்திகளை அளித்து வந்தார்.
அவரது அமைப்பில் அவரது ஓட்டுநர் ராஜா என்பவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் தீபாவின் கணவர் மாதவன் அதிருப்தி அடைந்தார். இதன் காரணமாக தீபாவின் கணவர் மாதவன் எம்ஜிஆர் ஜெயலலிதா தி மு க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பின்னர் சில காலங்களுக்கு பிறகு ஓட்டுநர் ராஜாவை தனது அமைப்பில் இருந்து நீக்கினார் தீபா. பின்னர் ஏற்பட்ட சமரசத்திற்கு பிறகு மீண்டும் புதிய பதவியுடன் ராஜா அந்த அமைப்பில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து ஓட்டுநர் ராஜாவை நீக்கி உத்தரவிட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று செய்தியாளர்களை அழைத்து வெளியிட்ட அறிவிப்பில், “அஇஅதிமுக (ஜெ.தீபா அணி) மற்றும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும் மாறாகத் தொடர்ந்து, கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் கழகத்திலிருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், ஏ.வி.ராஜா விடுவிக்கப்படுகிறார். எனவே, அவருடன் கழக உறுப்பினர்கள் யாரும் கழகக் கட்டுப்பாட்டை மீறி எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
தீபா வச்சிருப்பது எல்லாம் கட்சியா என்று மக்கள் கேட்கும் நிலையில் தான் உள்ளது. ஆனால் தமிழக அரசியலில் அவ்வப்போது பத்திரிக்கையாளர்களை அழைத்து இதுபோன்ற செய்திகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். இதுபோல பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தான் அந்த அமைப்புகள் இருப்பதே தெரிய வருகிறது.