நம் எல்லோருக்குமே நிச்சயம் ஒரு பிடித்த நிறம் இருக்கும். அதேபோல, இயற்கையாகவே நமக்கு மற்ற நிறங்களைவிட, சில நிறங்களை அதிகமாகப் பிடிக்கும். ஒரு நிறம் பிடிப்பதற்கும் பிடிக்காததற்கும் பின்னணியில் உளவியல் காரணங்கள் இருக்கின்றன என்றும், அவை ஒருவரின் ஆளுமையை ஓரளவு வெளிப்படுத்துகின்றன என்றும் சொல்கின்றனர் உளவியலாளர்கள்.
வண்ணங்களை வைத்து மனிதரின் ஆளுமையை மதிப்பிடுவது ஒரு முழுமையான அறிவியல் அல்ல. ஆனால், இத்துறையில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுவரை கிடைத்த ஒப்பீடுகளின் அடிப்படையில் உங்களுக்கு பிடித்த நிறத்துக்கும், உங்கள் ஆளுமைக்கும் உள்ள தொடர்பை சொல்ல முயல்கிறோம். இப்போது சொல்லுங்கள், உங்களுக்கு பிடித்த நிறம் எது?
நீலம்
நீல நிறத்தின் மீது காதல் கொண்டுள்ள நீங்கள், உங்களின் உடல், மனம், ஆன்மா மூன்றின் நலனிலும் ஆழ்ந்த அக்கறை கொண்டவர். பொதுவாக அமைதியாக, சூழ்நிலை எப்படி இருந்தாலும் சமநிலையுடன் இருக்கும் நீங்கள், மூட் சரியில்லையென்றாலும், கொஞ்ச நேரத்தில் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, உடனடியாக சகஜ நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வுக்கு அடையாளம் நீலம் என்கிறது உளவியல். பொதுவாக வழக்கத்தை அப்படியே பின்பற்ற விரும்பும் நீலம் விரும்பிகள், அதிரடி மாற்றங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. நீங்கள் மலரும் நினைவுகளை அசை போடுவதில் அதிக விருப்பம் உள்ளவர். மற்றவர்களுடன் நட்புக் கொள்வதில், ஆரம்பத்தில் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டாலும், பழகிய பின்னர் நம்பிக்கை வைத்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் உறவை தொடருவீர்கள்.
சிவப்பு
சிவப்பு நிறத்தின் மீது காதல் கொண்ட நீங்கள், பொதுவாக எதையாவது சாதிக்கும் முனைப்பில் இருப்பீர்கள். ஆனால் சில நேரங்களில் அதிரடியாக முடிவுகள் எடுத்து, எல்லாவற்றையும் முயன்று பார்த்துவிட முயலுவீர்கள். உங்களை அனைவரும் கவனிக்க செய்யும் என்பதால், சிவப்பு அணிவதை பெரிதும் விரும்புவீர்கள். எப்போதும் துறுதுறுப்புடனும் எச்சரிக்கையுடனும், எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருப்பீர்கள்.
இது காதலின் நிறமாகவும் இருப்பதால், உங்களிடமும் காதலுணர்வு கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இதனால் அடிக்கடி காதலில் விழுவதும் நடக்கலாம். செயலில் ஆர்வம் கொண்ட நீங்கள், எதையும் இன்றே முடிக்க வேண்டுமென்று நினைப்பவர். மற்றவர்களை கணிப்பதில் அவரசமும், சில நேரங்களில் ஒருதலையாக பக்கச் சார்புடன் நடந்து கொள்வீர்கள். மாற்றத்தை விரும்பும் நேர்மறை நம்பிக்கைக் கொண்ட நீங்கள், அடிக்கடி அமைதியற்றும் காணப்படுவீர்கள்.
பச்சை
பச்சை நிறம் உங்களின் ஃபேவரைட் என்றால், நீங்கள் உண்மையானவர், மிகவும் பிராக்டிகலானவர். நிலையான மனமும் சமநிலைத்தன்மையும் கொண்ட நீங்கள், தாராள மனமும், உங்கள் எண்ணத்திலும் உணர்வுகளிலும் அன்பானவர் ஆக இருப்பீர்கள். இயற்கையை போலவே, எளிதாக மற்றவர்களை ஈர்த்துவிடுவீர்கள், தாராள மனப்பான்மையுடன் உங்களின் தன்மதிப்பும் பாதுகாப்பு உணர்வும், சேரும்போது, மற்றவர்களால் பாராட்டவும் நேசிக்கவும் படுவீர்கள்.
சில நேரங்களில் உங்களின் சமநிலை தவறும்போது, கவலையடைவீர்கள். குழு, மற்றும் சமூகத்தின் அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைவீர்கள். உண்மையான நண்பராகவும், துணைவராகவும் விளங்கும் நீங்கள், பெருந்தன்மை கொண்டவர், ஆனால் உணர்ச்சிகரமானவர் அல்லர்.
ஆரஞ்சு
சிவப்பின் துணிச்சலும், மஞ்சளின் உற்சாகமும் கொண்டது உங்களுக்கு பிடித்த ஆரஞ்சு. அதிக ஆற்றல் கொண்ட, நேர்மறையான, நல்ல குணநலம் கொண்டவர் நீங்கள். உங்களிடம் ஆக்ரோஷம் கிடையாது; ஆனால் உறுதியான பிடிவாதம் உண்டு, இது அரிதான திறன். எப்பவும் பிசியாகவே இருக்க வேண்டுமென்று நினைப்பவர் நீங்கள். போரடிப்பது உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. எப்போதும் எதையாவது செய்துகொண்டிருக்க உங்களுக்கு படைப்பாற்றலும், முனைப்பும் அதிகமாகவே இருக்கும் என்பதால் பிரச்னையில்லை.
மற்றவர்களை ஒன்று சேர்ப்பது, அவர்களுக்கிடையில் பாலமாக செயல்படுவது என சோஷியலைஸ் செய்துகொள்வதில் சிறந்தவர் ஆக இருப்பீர்கள். ஆனால், மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்று அதிகம் சிரத்தை எடுத்துக்கொள்பவர்.
பர்ப்பிள்
கலைத்திறனும், தனித்துவமும் கொண்டவர்களின் விருப்பமான வண்ணம், பர்ப்பிள். உள்ளுணர்வும், சில நேரங்களில் ஆன்மிகத்தில் ஆர்வமும், வாழ்க்கையை பற்றிய ஆழமான அர்த்தமும் கொண்டவர் நீங்கள். சிறிய விஷயங்களுக்கு கூட, அதிக கவனம் அளிப்பதுடன், உங்கள் வழியில் வரும் எல்லாவற்றையும் கவனித்து, பகுப்பாய்வு செய்பவர்.
மற்றவர்களின் குணத்தை சரியாக கணிக்கும் திறமை கொண்ட நீங்கள், எதிகாலத்தை சரியாக கணிப்பதிலும் திட்டமிடுவதிலும் கில்லாடி. அவ்வப்போது ஆழமாக உணர்ச்சிவசப்படுவதால், சில நேரங்களில் இறுக்கத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் நலத்தைவிடவும், அடுத்தவர் தேவைகளுகே முன்னுரிமை கொடுப்பதால், சில நேரங்களில் இது தவறாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுவதும் உண்டு. உங்கள் இயல்புக்கு ஏற்ப அமைதியும், எண்ணமும் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
கிரே (சாம்பல்)
வாழ்க்கையின் நேர்மறை, எதிர்மறை விஷயங்கள் இரண்டையும் நடுநிலையுடன் அணுகும் நபர் நீங்கள். எப்போதும் சமநிலை கொண்ட வாழ்க்கையை விரும்பும் நீங்கள், குழப்பங்கள் நிறைந்த வெளி உலகத்திலிருந்து உங்களை காப்பாற்றிகொள்ள தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர். வாழ்க்கையில் அமைதி நிலவ, சமரசம் செய்துகொள்பவர், ஆனால், கூர்மையான சிந்தனை இல்லாததும், தன்னம்பிக்கைக் குறைவும் உங்களின் நெகடிவ் பக்கம் எனலாம்.
வாழ்க்கையின் சிறிய விஷயங்களை கூட நன்கு அனுபவிக்கும் மனது கொண்ட நீங்கள், சில நேரங்களில் ரிசர்வ் மூடுக்கு சென்றுவிடுகிறீர்கள். கடினமான முடிவெடுக்க வேண்டிய நேரங்களில், உங்களுக்கு வாழ்க்கையும் கடினமாக மாறிப்போகும்.
சில்வர்
நீங்கள் ஒரு சிந்தனையாளர்; உள்நோக்கிய சிந்தனையும் கற்பனைத்திறமும் கொண்டவர். வித்தியாசமான கோணங்களில் இருந்து விஷயங்களை பார்ப்பதற்கும், உங்களின் வித்தியாசமான கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும் நீங்கள் தயங்குவதில்லை. உங்களுக்கு நிறைய அனுபவங்கள் இருப்பதால், உங்கள் அனுபவத்தையும் அறிவையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவீர்கள்.
ஆற்றலும் செயல்திறனும் ஒருங்கே கொண்டிருப்பது, சுயதெளிவு, ஈர்க்கக்கூடிய பண்பு, இவற்றால் மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். நீங்கள் நினைப்பது போலவே வாழ்க்கை நடப்பதாக கருதுவதால், எப்போதும் ஒரு உண்மையான புன்னகையை முகத்தில் ஏந்திருப்பீர்கள்.
பிங்க்
உணர்ச்சிப்பெருக்கு இல்லாத, மென்மையான காதல் மற்றும் நேச உணர்வுகளை கொண்டவர்கள் பிங்க் விரும்பிகள். பிங்க்கை விரும்பும் பெண்களிடம் தாய்மை உணர்வு மேலோங்கி இருக்கும். நீங்கள் பிங்க் விரும்பிகள் எனில், மற்றவர்களை போஷிப்பவர்களாக இருக்கும் நீங்கள், அதையே மற்றவர்களிடம் இருந்து பதிலுக்கு எதிர்பார்ப்பீர்கள்.
பாதுகாப்பு, சிறப்பு கவனிப்பு, பாதுகாப்பான வாழ்க்கை என உங்களின் எதிர்பார்ப்பு இருக்கும். எப்போதும் உங்களை மென்மையானவர்களாக, பலவீனமானவர்களாக காட்டிக்கொள்ள விரும்புவீர்கள். பொதுவாக நேர்மறைச் சிந்தனையாளரான நீங்கள், மற்றவர்களிடம் இருக்கும் நல்லவற்றை தான் பார்ப்பீர்கள்.
கருப்பு
உங்களுக்கு கருப்பு நிறம் தான் மிகவும் பிடிக்குமென்றால், நீங்கள் உறுதியான மனமும், தீர்மானத்துடன் செயல்படும் மனமும், தன்னம்பிக்கையும் கொண்டவர் என்று சொல்லலாம். ஆனால் இதில் ஒரு குறையும் உண்டு. நீங்கள் வெளியில் காட்ட விரும்பாத, வெளி உலகத்தில் இருந்து மறைக்கும் ஒரு இருள் பக்கமும் உங்களுக்கு இருக்கலாம்.
அதிகாரமும் அந்தஸ்தும் நீங்கள் விரும்புபவை. நீங்கள் விரும்பியதை அடைய முயற்சிக்க நீங்கள் தயங்குவதேயில்லை. பொதுவாக கவர்ச்சிகரமானவராகவும், புதிரானவராக தோன்றினாலும், உங்கள் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டுகிறவராக கூட தோன்றலாம். மற்றவர்களிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்ப்பவராகவும், அதிகாரம் செலுத்துபவராகவும் கூட அவர்கள் நினைக்கலாம். ஆனால், எல்லா சூழ்நிலைகளையும் கடந்து, நீங்கள் எப்போதும் சிறந்தவராக விளங்குவீர்கள்.
வெண்மை
வெண்மையை விரும்புகிறவர்கள் எளிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் சுத்தம் பற்றிய அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இப்போதுதான் வெண்மையை விரும்பத் தொடங்கி இருக்கிறீர்கள் எனில், உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் தொடங்கி இருக்கிறது என்று அர்த்தம்.
எப்போதுமே வெண்மை தான் உங்கள் சாய்ஸ் எனில், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாத தன்னம்பிக்கை மிக்க நபர் நீங்கள். உங்களின் சொந்த வாழ்க்கையில் எளிமையாகவும், சுதந்திரமாகவும், சுயசார்புடன் இருக்க எப்போதும் ஏங்குவீர்கள்.
பிரவுன்
பிரவுன் நிறத்தை விரும்பும் நீங்கள் அமைதியும், நிதானமும் கொண்டவர். நிலைத்தன்மையும், சவுகரியமும் தான் நீங்கள் எதிர்ப்பார்ப்பது. விசுவாசம், பணிவு, அடக்கம், சார்ந்திருத்தல் போன்ற அம்சங்கள் உங்களுடையவை. சிறந்த நண்பராக, சிறந்த பெற்றோராக, சிறந்த துணைவராக இருப்பீர்கள்.
கடின உழைப்பும், சுறுசுறுப்பும் கொண்ட உங்களிடம், மற்றவர்கள் வெளிப்படையாக பேச தயங்க மாட்டார்கள். உங்களின் நட்பான அணுகுமுறை காரணமாக, உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். பலரும் உங்களை சார்ந்திருக்கும் அதே வேளையில், உங்களுக்கும் சில நேரம் அவர்களின் ஆறுதல் தேவையாக இருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறீர்கள்.
மஞ்சள்
சாகச உணர்வும், புதுமையை தேடலும், சுயதிருப்தியும் கொண்டவர்கள் தான் மஞ்சளை தேர்ந்தெடுக்கின்றனர். பொதுவாக உற்சாகமும் விவேகமும் கொண்ட நீங்கள், பிசினஸ் மூளை அதிகம் கொண்டவராகவும், நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் இருப்பீர்கள். சுதந்திர சிந்தனையும் செயலையும் விரும்பும் நீங்கள், சில சமயங்களில் கடமைகளை கைவிடவும் தயங்க மாட்டீர்கள்.
உங்களின் கனவுகளை நனவாக்க மற்றவர்களின் உதவி தேவைப்படும். பொதுவாக. நிறைய நண்பர்களை வைத்துக்கொள்வதைவிட, நெருங்கிய சில நண்பர்களுடன் எப்போதும் உறவாடுவதை விரும்புவீர்கள். குழு செயல்பாடுகளில் ஆர்வம் குறைவாகவே இருக்கும். எப்போதும் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டுமென்றும், எப்போதும் நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டுமென்றும் விரும்புவீர்கள். மற்றவர்களிடம் இருந்து தனித்துத் தெரியவும், தலைமை தாங்கவும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து எப்போதும் காத்திருப்பீர்கள்.
தங்கம்
மிகப்பெரிய, ஆற்றல் மிக்கவர்களாக இருந்தாலும், மற்றவர்கள் உங்களை பற்றி அறிந்திருக்கிறார்களா என்பதை பற்றி கவலைப்படாத ஆளுமை கொண்டவர்கள் தங்க நிறத்தின் மீது மோகம் கொண்டிருக்கிறார்கள். சிறந்த விஷயஙளை விரும்பும் நீங்கள், உங்கள் மீதும், உங்கள் உடமைகள் மீதும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்பவர்.
மேலும் மிகவும் துல்லியமாகவும். நீங்கள் செய்யும் விஷயங்கள் எல்லாமே, அவை சிறிய விஷயங்களாக இருந்தாலும், பர்ஃபெக்ட் ஆக இருக்க வேண்டுமென விரும்புவீர்கள். எல்லாவற்றிலும் வெற்றியை நோக்கிச் செல்லும் நீங்கள், பொதுவாக நல்ல ஆரோக்கியம் கொண்டவர்கள்.
மெரூன்
கடுமையான வாழ்க்கை அனுபவங்கள் உங்களை பண்படுத்தி, மற்றவர்கள் விரும்பக்கூடியவராக, பெருந்தன்மை கொண்டவராக மாற்றியுள்ளன. வாழ்க்கையில் பெரும் சவால்களை சந்தித்து, அவற்றை சமாளித்து வென்று மேலெழுபவர்களின் விருப்பமான வண்ணம் இது. பாதித்த அனுபவங்களால் சோர்ந்து போகாமல், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முதிர்ச்சி பெற்றதால், சிறந்த ஒழுங்கும் கொண்டவர் ஆக நீங்கள் இருக்கிறீர்கள்.
டர்க்காயிஸ்
நீலப் பச்சை வண்ணமான டர்க்காயிஸை விரும்பும் நீங்கள், கடல் போன்ற ஆழம் கொண்டவர். சில நேரங்களில் அமைதியாகவும், சில நேரங்களில் ஆக்ரோஷமாகவும் வெளிப்படுகிறவர். சிக்கலான, கற்பனைத்திறன் மிக்க நீங்கள், மிகவும் ஒரிஜினலானவர்.
வெளியில் கூலாக இருந்தாலும், சில நேரங்களில் உள்ளுக்குள் கடினமாகவும் குழப்பமாகவும் இருக்கலாம். ஆனால், சூழ்நிலை எப்படி இருந்தாலும், விரைவில் அதனுடன் தகவமைத்துக் கொண்டு விடுவீர்கள். எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான நாள் தான். அசராத நீங்கள், எதற்கும் எப்போதும் தயாராக இருப்பீர்கள்.
லாவண்டர்
உயர் மனநிலையில் வாழ்கிறவர்களின் விருப்பத் தேர்வு இந்த லாவண்டர் நிறம். குறைகூற முடியாத, எப்போதும் அழகாக உடையணிந்து காட்சியளிக்கும் உங்கள் கண்கள், கேவலமான விஷயங்களை காணாது. வாழ்க்கையின் உயர்ந்த விஷயங்கள், உயர் கலாச்சார அம்சங்களை தேடுவதில் எப்போதும் ஆர்வம் கொண்டவர்கள் நீங்கள்.
விருப்பங்களை அடைய உழைத்தாலும், கைகளை அழுக்குப்படுத்திக் கொள்ளாதவர். பொதுவாக படைப்பாற்றல் மிக்கவராக, உற்சாகம் கொண்டவராக, நாகரிகமும் நாசூக்கும் கொண்டவராக இருப்பதால் மற்றவர்கள் உங்களை கவனிக்கும்படி செய்வீர்கள்.