வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் இரவு வீதியால் பயணித்துக்கொண்டிருந்த பொதுமகனை கடந்திச்சென்ற கும்பலொன்று அவரிடமிருந்த உடமைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவமொன்று கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த குறித்த பொதுமகன் மரணவீடொன்றில் கலந்து கொள்ளவென பேரூந்தில் பயணித்து உடுப்பிட்டி வருகை தந்துள்ளார்.
பருத்தித்துறை வீதியில் புறாப்பொறுக்கி பகுதியில் வாகனத்திலிருந்த இரவு 9மணியளவில் இறங்கிய அவர் உடுப்பிட்டி பகுதியில் நடைபெற்ற மரணகிரியைகளில் பங்கெடுக்க வசதியாக வெள்ள வீதியினூடாக கால்நடையாக சென்றுள்ளார்.
அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட கும்பலொன்று குறித்த பொதுமகனை வழிமறித்து விசாரித்துள்ளது.
உடுப்பிட்டியில் கொள்ளைகள் நடப்பமாகவும் தாங்கள் சிவில் உள்ள காவல்துறையினரெனவும் கூறி விசாரணைக்கு வருகை தருமாறு மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிச்சென்றுள்ளனர்.
பின்னர் அப்பகுதியிலுள்ள பனங்கூடல் ஒன்றினுள் குறித்த பொதுமகளை மரமொன்றுடன் கட்டிவைத்த பின்னர் அவரிடமிருந்த பணம்,கைத்தொலைபேசி என்பவற்றினை பறித்துக்கொண்டு குறித்த கும்பல் சென்றுள்ளது.
காலை வரை மரத்தில் கட்டுண்ட நிலையில் இருந்த குறித்த பொதுமகனை அங்கு சென்றிருந்த இன்னொருவர் கண்ணுற்று கட்டுகளை அவிழ்த்துவிடுவித்துள்ளார்.
உடுப்பிட்டி பகுதியில் கட்டுக்கடங்காது அரங்கேறி வரும் கொள்ளைகளின் தொடர்ச்சியாக தற்போது ஆட்களை கடத்தி உடமைகளை சூறையாடும் கட்டம் வரை அது சென்றுள்ளது.
இந்நிலையில் வல்வெட்டித்துறை காவல்துறையில் முறைப்பாடு செய்து பலனேதும் கிட்டுமென தான் நம்பவில்லையெனவும் அதனால் முறைப்பாட்டினை செய்ய தான் விரும்பியிருக்கவில்லையெனவும் பாதிக்கப்பட்ட பொதுமகன் தெரிவித்திருந்தார்.