கைதான புலிகளின் ஆண் போராளிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண் இராணுவம்: ஐ.நாவில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஈராக் சிறை பாலியல் கொடுமை படம்

யுத்தத்தின் இறுதியிலும் அரசாங்க படைகளிடம் சரணடைந்த, கைதான தமிழர்கள் கொடூரமான பாலியல் வதையை அனுபவித்தார்கள் என்ற அதிர்ச்சி அறிக்கையை உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் அமைப்பு வெளியிட்டுள்ளது.

2009 ஆண்டு முதல் இன்று வரையான காலப்பகுதியில் தடுப்பு காவலில் வைத்து சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை, சட்டநிபுணர் யஸ்மின் சூகா தலைமையிலான உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் நேற்று முன்தினம் ஜெனீவாவில் அம்பலப்படுத்தியது.

“மௌனம் கலைந்தது. தப்பி வந்த ஆண்கள் போரை மையப்படுத்தி நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசுகிறார்கள்“ என்ற இந்த அறிக்கை இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு, வெளிநாடுகளிற்கு தப்பிவந்த 121 தமிழ் ஆண்கள் வழங்கிய தகவல்களை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.

இந்த அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெல்ஜியம் லூவன் பல்கலைகழகத்தை சேர்ந்த கலாநிதி ஹெலீன் குறிப்பிடும் போது- “அதிர்ச்சியடைய வைக்கும், மிகவும் பயங்கரமான இப்படியான கொடூரங்களை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டதில்லை.“ என தெரிவித்துள்ளார்.

“உலகநாடுகளில் நடந்த வன்முறைகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தொடரும் கொடூரங்கள் மிக மோசமானவை. பொஸ்னியா குறித்தும் ஆய்வு செய்திருக்கிறேன்.

ஆனால் இலங்கை தடுப்புகாவலில் பல வருடங்கள் வைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை கேள்விப்படும்போது மிக மோசமான கொடூரத்தை உணர்கிறேன். பலர் கட்டி வைக்கப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இப்படியான சம்பவங்களை இதற்கு முன் நான் கேள்விப்பட்டேயிருக்கவில்லை“ என ஹெலீன் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில்14 வயதுடைய சிறுவன் தொடக்கம் 40 வயதான ஆண் வரையான பல தரப்பட்ட வயதுடையவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.

தன்னை விசாரணை நடத்திய புலனாய்வு பிரிவு பெண் அதிகாரி கொடூரமான பாலியல் துன்புறுத்தல் புரிந்ததாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவச்சீருடையுடன் இருந்த அந்த பெண் அதிகாரி, பொல்லுகளால் தன்னை தாக்கியதுடன், தனது ஆண் உறுப்பை சப்பாத்து கால்களால் மிதித்து, ஆண் உறுப்பில் நூலைக்கட்டி இழுத்து துன்புறுத்தியதாக வாக்குமூலமளித்துள்ளார். அந்த சிங்களப் பெண் தமிழிலும் உரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவரின் வாக்குமூலத்தில், அவரையும் இன்னும் சில தமிழ் ஆண் கைதிகளையும் பெண் பொலிசாரின் குழுவொன்று சித்திரவதை புரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

“எமது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி விட்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் நால்வர் இருந்த அறைக்கு கூட்டிச் சென்றார்கள். இருவர் பொலிஸாரின் சீருடை- கட்டைப்பாவடை- அணிந்திருந்தனர். மற்றைய இருவரும் சேலை அணிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண்“ என்று சித்திரவதைக்குள்ளானவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எம்மை தம்முன் நிர்வாண நிற்க வைத்து, எமது அங்கங்களை குறித்து தமக்குள் பேசி பரிகசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முன்பாக சில மணி நேரம் அப்படியே நிற்க வைக்கப்பட்டிருந்தோம். பின்னர் பாலியல்ரீதியிலான சித்திரவதைகள் புரிந்தார்கள்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, விசாரணைகளை மூடி மறைப்பதையே அரசாங்கம் வழக்கமாக வைத்திருப்பதாக அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.