இந்தியாவினால் வழங்கப்பட்ட உறுதி மொழியை நம்பி பயணித்த பிரபாகரன்!!…. ஆனால் நடந்தது?

2009ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்க சோனியா காந்தி தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கப்பல் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

dailypioneer.com என்ற இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும்,

இலங்கை தொடர்பிலும், போர் தொடர்பிலும் சுப்ரமணியன் சுவாமி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறார்.புதுடில்லியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ அதில் கலந்து கொண்டிருந்தார்.

இதேநேரம், தமது இந்திய விஜயத்தின் போது அந்த நாட்டு ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களில் மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு தகவல்களையும் வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில், இறுதிப் போர் குறித்து தற்போது மேற்கண்ட தகவலை சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ளார். அதில் மேலும் அவர்,போரின் இறுதி கட்டத்தின்போது, அப்போதைய இந்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரபாகரனுக்கு தகவல் ஒன்றை வழங்கியிருந்தார்.

பிரபாகரனை காப்பாற்ற இந்திய கடற்படை வரும் என்றும், அதற்காக காத்திருக்குமாறும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த நிலையில், பிரபாகரன் காட்டு பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி பயணித்தபோது அங்கு கடற்படை சென்றது. ஆனால் அது இலங்கை கடற்படை.

இந்திய கடற்படை கப்பல் புறப்பட தயாராகியிருந்த போதும், அதிகாரிகளிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்தக் கப்பல் புறப்படவில்லை.எனினும், திட்டம் மாற்றப்பட்டமை குறித்து அப்போதைய காங்கிரஸ் தலைமையினால் பிரபாகரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளதாக குறித்த இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.