காதலிக்கும் பெண்களை கண்டுபிடிக்க???

அப்பாவி பெற்றோருக்கு அவசிய கையேடு

இந்த காதல் சமாச்சாரத்தில் சிக்காத இளவயதுக்காரர்கள் இருப்பார்களா என்று பார்த்தால் நிச்சயம் இல்லையென்று துணிந்து சொல்லலாம். அப்படியில்லையென அடம்பிடிப்பவர்களை விட்டுவிடலாம். ஏனென்றால் உலகத்தில் ஒரேயொரு திருஞானசம்பந்தர், ஐன்ஸ்டீன், விவேகானந்தர், தெரசாதானே. எங்காவது ஒன்றிரண்டு பேர்தான் ஊர்சொல்ல வாழ்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு விடயத்திற்கு வருவோம்.

காதல் மனிதர்களில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகின்றது? அதைத்தான் வைரமுத்து அழகாக சொல்லிவிட்டார்- ‘காக்கை கூட உன்னை கவனிக்காது. இந்த உலகமே உன்னை பார்ப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்வாய்’ என. பிறகென்ன, அப்படித்தானே தலைகால் புரியாமல் காதலிப்பவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். காதலிக்கும் வரை பேஸ்புக்கில் ரோசாப்பூபடம் வைத்திருப்பவர்கள், மிக துணிவாக நீதியில்லாமல் நானில்லை என்பது மாதிரியான மொக்கை கவிதைகள் எல்லாம் எழுத தொடங்கிவிடுகிறார்கள்.

இந்த பகுதியில் இப்பொழுது பார்க்கப் போவது, காதல் எப்படியெல்லாம் பெண்களை மாற்றுகிறதென்பதை. பொதுவாக நமது பெண்கள் மிக அடக்கமாம். காதல் மாதிரியான விடயங்களை வெளியில் சொல்லமாட்டார்களாம். (யாருக்கப்பா தெரியும்… அவர்கள்தான் சொல்கிறார்கள்) ஆனால் பாருங்கள், பேரூந்துகளிலும், பொதுஇடங்களிலும் காதிற்கும் வாய்க்குமாக தொலைபேசியை மாற்றிமாற்றி குசுகுசுத்துக் கொண்டு திரிவதும் இவர்கள்தான். அவர்கள் வீட்டிலிருக்கும் பாட்டியுடன்தான் அப்படி சின்னியராக கதைக்கிறார்கள் என நம்பிவிடாதீர்கள். இதெல்லாம் காதலிற்கான முதலாவது அடையாளம் என அடித்து சொல்கிறார்கள், இந்த விடயத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.

பொதுவாகவே உணர்வுகளை அதிகம் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள் என கூறப்படும் நமது பெண்களிற்கு காதல் வந்தால் எப்படி நடப்பார்கள்… எதை வைத்து கண்டுபிடிக்கலாம்? அப்பாவியான பெற்றோர்களே… எச்சரிக்கையுடன் இதை படித்து வைத்திருங்கள்.

♥ காலை 9மணி வேலை. 8.30க்கு அரக்கப்பரக்க எழும்பி, ஒழுங்காக பல்லும் விளக்காமல் அகப்படும் உடுப்பை மாட்டி.. பொட்டும் சரியாக வைக்காமல், ஒராளுக்கான சாப்பாட்டு பார்சலுடன் புறப்படுகிறாரா உங்கள் பிள்ளை… அப்பாடா என நெஞ்சில் கைவைத்துக் கொள்ளுங்கள் பெற்றோரே. இன்னும் அவருக்கு ரியூப் லைட் எரியவில்லையென்பது கென்போர்ம்.

ஆனால், 6 மணிக்கே எழும்பி, வாரத்தில் மூன்று நாளு தடவை தலை குளித்து உடுப்பு அயன் செய்து, மாற்றிமாற்றி உடுப்பு போட்டு பார்த்து, பத்து தடவை கண் மை அழித்து அழித்து சரிசெய்து, நாலு பொட்டை நாற்பது விதமாக வைத்துப்பார்த்து… நண்பியையோ, நாயையோ காரணம் காட்டி ஒன்றுக்கு இரண்டு பார்சல் சாப்பாட்டுடன் கிளம்புகிறாரா உங்கள் பெண்… ஆறுமுகம்.. அலேர்ட்டாகு.. விடயம் வில்லங்கமாகிவிட்டது.

♥ வேலை முடித்து மாலையில் திரும்பியதும், சின்ன வயதிலிருந்ததைப் போலவே, அதிகாரி திட்டியதிலிருந்து, அடுத்த சீற்றிலிருந்தவன் லுக்குவிட்டது வரை அனைத்தையும் அம்மாவிடம் சொல்லி, குடும்பத்துடன் கும்மாளமடிக்கிறாரா… உங்கள் மருமகன் இன்னும் தயாராகவில்லையென்று அர்த்தம்.

ஆனால் பாருங்கள், எல்லோரும் ஒன்றாக இருக்க, அவள் மட்டும் தனியாக இருந்து யோசிக்கிறாள் என்றால், அது ஒன்றில் ஒருதலைக்காதலாக இருக்கும். அல்லது காதலர்களிற்குள் ஏதோ பிச்சல் புடுங்கள். ஏதோ மனதத்துவ மாத்ருபூதம் என்ற நினைப்பில் இதையெல்லாம் தீர்க்க நினைக்காதீர்கள். ‘என்னம்மா பிரச்சனை’யென கேட்டால், தமிழ்பட ஹீரோயின்ஸ் சொல்வதைப் போல தலையிடிக்கிறதென சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.

அதுபோல, அறையை பூட்டிவிட்டு போனும் கையுமாக இருக்கிறாரா… வெள்ளம் தலைக்குமேல் போனபின்னர் சாணென்ன முழமென்ன?. நீங்கள் வழக்கம் போல ‘எங்கள் வீட்டு கல்யாணம்’ சீரியல் பார்த்து கொண்டிருங்கள்.

♥ வீட்டிலோ, அலுவலகத்திலோ, நண்பர்களிடத்திலோ அவளது தொலைபேசியை யாராவது எடுக்கும் போது பேசாமல் இருந்தால், பட்சி இன்னும் சிக்கவில்லையென்று அர்த்தம். மாறாக, தூக்க முன்னரே முந்திரிக்கொட்டை மாதிரி செயற்பட்டு பாய்ந்து பறித்தால், ஆள் கிளீன்போல்ட் என்று அர்த்தம்.

♥ வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும்போதோ, நண்பர்கள் எங்காவது செல்லும்போதோ, ‘ஏய் வாறியா’ என கேட்டால், உடனே ஓகே சொன்னால் ஆள் சிங்கிள்தான். மாறாக, ‘ம்…’ என இழுத்து போனை எடுத்து எஸ்.எம்.எஸ் போட்டால், ஆள் சிங்கத்திடம் பொமிசன் கேட்கிறார் என்று அர்த்தம்.

♥ சில சமயங்களில் உங்கள் மகள், தோழி தனிமையில் சிரித்துக் கொண்டு நிற்பார். பிள்ளையை தெல்லிப்பளை, அங்கொடைக்கெல்லாம் கொண்டு போக வேண்டுமென பயப்பிடாதீர்கள்.. இது மேற்றரே வேற. உங்களிற்கு மாப்பிள்ளை பார்க்கும் செலவை குறைத்து விட்டார் என்று அர்த்தம்.

♥ கதைக்கும் போது, காதலைப்பற்றி பேச்சு வரும்போது, ‘அந்த கருமத்த விடப்பா’ என்ற ரீதியில் பேசினால், ஆள் இன்னும் உங்கள் வீட்டுபிள்ளைதான். ஆனால், காதலைப்பற்றி ஆகா ஓகோவென பேசத் தொடங்கினால்… இப்பொழுதே உசாராகிவிடுங்கள்.

♥ உங்கள் மகளிற்கு, நண்பிக்கு தொலைபேசி எடுக்கிறீர்கள்… நீங்கள் எடுக்கும் சமயத்திலெல்லாம் அது ரிங் ஆகிறது. நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டியதில்லை. அதுபோல வீட்டில், அலுவலகத்தில் போன் எங்கோ, ஆள் எங்கோ என திரிந்தாலும் ஆள் ஓகேதான். ஆனால் எப்பொழுதும் போனும் கையுமாக திரிகிறார்… ஒன்றுக்கு இரண்டு போன் வைத்திருக்கிறார்… எப்பொழுது அழைத்தாலும் வெயிட்டிங்கில் போகிறதென்றால்… பிறகென்ன, யாரந்த பையன் என்பதை அறிய முயலலாம்.

♥ யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தோன்றும் உடுப்பை அணிந்து சிம்பிளாக திரிந்தால் நம்பிக்கையாக இருக்கலாம். மாறாக, நான் ‘பஞ்சாபிதான் போடுவன்.. நான் ஜீன்ஸ், ரொப்தான் போடுவன்… நான் கட்டை,குட்டை பாவாடையெல்லாம் போடமாட்டன்’ என திடீர் கலாசார காவலர் போல் பேசுகிறாரா… இது மேற்றரே வேற.

♥ வீட்டிலோ, வகுப்பறையிலோ, அலுவலகத்திலோ எல்லா பெண்களோடும் சமமாக இருந்தால, பெரும்பாலும் காதல், கண்றாவியெல்லாம் கிடையாது. மாறாக ஒருத்தியோட மட்டும் எப்ப பார்த்தாலும் கிசுகிசுத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் லவ்சு தான்.

♥ பேஸ்புக்கில் இப்பொழுதும் ஆர்யாவின் படங்களையும், அல்ப்ஸ் மலைத் தொடரையும் தான் உங்கள் மகள் புரபைல் பிக்சராக வைத்துள்ளாரா?. ஓன்றுக்கும் யோசிக்காதீர்கள். ஆள் இன்னும் மலையேறவில்லை. ஆனால் தனது படங்களை… குறிப்பாக பூக்கள், காதலர்களின் உருவங்களிற்குள் போட்டேசொப்பில் இணைத்து போடுகிறார் என்றால், இப்பொழுதே கல்யாண காட் அடிக்க தயாராகுங்கள்.