வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இல்லாமல் தவித்த கோடீஸ்வர இளம்பெண்ணை!!

ஒரு ஊரில் திவ்யா என்ற மிகவும் அழகான அதிக ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழும் ஒரு பெண் இருந்தார். இவர் காதல் தோல்வியால் நிம்மதி இழந்து வீட்டை விட்டு வெளியே செல்லாமல், நீண்ட நாட்கள் வீட்டிற்குள்ளேயே சிறை வாசம் அனுபவித்தாற் போல் வாழ்ந்து வந்தார்.

அப்படியே சில காலம் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக வெளியே செல்ல ஆரம்பித்து தனது சொந்த கம்பெனியில் ஒரு பணியாளராக பணி புரிந்து நாட்களை கடத்தி வந்தார் திவ்யா.இருந்தபோதிலும், மனதில் குழப்பங்களும், பிடிக்காத வாழ்க்கையை வாழ வேண்டுமா? என்ற எண்ணமும் அனு தினமும் திவ்யாவை போட்டு வாட்டிக் கொண்டிருக்க, சரி கவுன்சிலிங் செய்பவர்களிடம் சென்று பார்க்கலாம் என முடிவு எடுத்து கவுன்சிலிங் சென்றார்.

அங்கு, கவுன்சிலிங் செய்பவரிடம், என் வாழ்க்கை ஒரே சூனியமாக இருக்கிறது.. எவ்வளவு சொத்துக்கள் இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல், இலக்கே இல்லாமல் வாழ்க்கை என்னை இழுக்கிறது. என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும், மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி என்ன சொல்லுங்கள் என்று திவ்யா கேட்க, கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலகத்தில் தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைக்க, திவ்யா அவரை ஏன் கூப்பிடுகிறீர்கள் எனக்கு டீ வேண்டாம் எனக் கூறினார்.

உடனே, கவுன்சிலிங் செய்பவர், நான் டீ வாங்கி வரக் கூப்பிடவில்லை என்று கூறிவிட்டு, திவ்யா நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்ல சொல்கிறேன்…. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் என்றார்.

பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு, ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கிய சிறிது நேரத்தில் திவ்யாவின் கண்கள் குளமாகின.பணிப் பெண் கூறியதாவது…. என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல.யாரிடமும் சிரிக்க முடியவில்லை…. என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.

இப்படி இருக்கையில்.. ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழுது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது . எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது.அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது.

கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன். நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் என்னை சந்தோஷிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்.இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி அவர்தம் மகிழ நானும் பெரு மகிழ்வுற்றேன்.

இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா? என்பதே சந்தேகம் தான்.மகிழ்ச்சி என்பது,  அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன், நான் ஏழையாக இருந்தாலும் தினமும் நிம்மதியாக உறங்குகிறேன், அதுவே என் வாழ்வின் இறுதி வரை எனக்கு போதும் என்று கூறி முடித்தார் அந்தப் பணிப் பெண்.

இதை கேட்ட திவ்யா, ஓலமிட்டு கத்தி அழுதார். அவளால் காசு கொடுத்து வாங்கக்கூடிய அளவிற்கு எல்லாம் இருந்தது. ஆனால், பணத்தால் வாங்க முடியாத விஷயம் தன்னிடம் இல்லை என புரிந்து கொண்ட திவ்யா, உடனடியாக 20 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தார். அலுவலகத்திற்கு சென்று வந்தவுடன் குழந்தைகளுடன் ஆட்டம், பாட்டம் என விளையாட ஆரம்பித்தார்.

அதன் பின்னர், திவ்யாவின் வாழ்க்கையில் ஒரே சந்தோஷம் தான். நிம்மதியான உறக்கம், மகிழ்ச்சியான வாழ்க்கை என திவ்யாவின் கஷ்டங்கள் காணாமல் போயின.வாழ்க்கையில், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், தம்மால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்து பாருங்கள்…. அவர்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் எப்போதுமே இருக்கும்.