கடந்த சில மாதங்களாக ஆட்டம் போட்டு வந்த பாகிஸ்தான் தான் அணிக்கு சரியான பாடம் புகட்டியுள்ளது இந்திய அணி.
ஆசிய கோப்பைக்கு முன்னதாக ஜிம்பாவே அணியுடனும், வங்கதேச அணியுடனும் பாகிஸ்தான் வெற்றி பெற்ற போது, தாங்கள் தான் உலகின் மிகச்சிறந்த அணி போல பாகிஸ்தான் அணி மிகைபடுத்தி காட்டப்பட்டது.
இதற்கு சரியான பதிலடி கிடைக்கும் என்று இந்திய இரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேற்றைய ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு சிறந்த பாடமாக அமைந்தது.
துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி இறுதியாக 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சாஹல், யாதவ், பும்ரா தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித், தவான் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிந்த நிலையில் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 210 ரன்கள் எடுத்த நிலையில் சதம் அடித்த தவான் 114 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
மற்றொரு துவக்க வீரரான ரோகித் 111 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றியை பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்திய அணி 39.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இத்தனைக்கும் பாகிஸ்தான் ரோஹித்-தவான் ஜோடியை பிரிக்க சுழல்பந்து, வேகப்பந்து என்று மாறி மாறி பவுலர்களை பிரயோகித்தும், தவானை ரன்-அவுட் மட்டுமே செய்ய முடிந்தது.
அதுவும் ஆகாமல் இருந்திருந்தால் விக்கெட் இழப்பின்றி 238 எடுத்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றிருக்கும்.
இந்த வெற்றியின் மூலமாக ஆசிய கோப்பைக்கு முன்பாக இரண்டு நாடுகளுடன் பெற்ற வெற்றியை சொல்லி காண்பித்து தலைக்கனத்துடன் சுற்றி வந்த பாகிஸ்தான் அணி, வெற்றி பெற்றாலும் சரி, தோற்றாலும் சரி இந்திய அணியை போல நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்திருக்கும்.