தமிழகத்தில் தொடரும் போராட்டம்…!

கடந்த 17-ந் தேதி, பெரியார் சிலை அவமதிப்பு செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு மீண்டும் அவமதிப்பு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு அருகே காவராப்பட்டு கிராமத்தில் பெரியாரின் முழு உருவச் சிலை உள்ளது. நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து விட்டு தப்பியோடி உள்ளனர்.

இன்று காலை அந்த வழியாக சென்ற திராவிடர் கழகத்தினர் , பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி உறைந்தனர்.

மேலும் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் குறித்து அப்பகுதியில் பரவியதால் ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.

இதற்கிடையே பெரியார் சிலை அவமதிப்பு சம்பவம் பற்றி ஒரத்தநாடு காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து டி.எஸ்.பி. (பொறுப்பு) நாகராஜன் தலைமையில் ஏராளமான காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.