ஜோதிடத்தில் ஆறாவது ராசியாக கன்னி ராசி உள்ளது. கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி மாதமாகும். இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம் என்பதாகும்.
புதன் சைவத்திற்குரிய கிரகம் என்பதால் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. மேலும், பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.
புரட்டாசி மாதம் வெயிலும், காற்றும் குறைந்து மழை பெய்ய ஆரம்பிக்கும்.
இவ்வளவு மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இம்மாதம் சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை பாதிக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை ஒதுக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.
நமது உடல் நலனுக்காக நமது முன்னோர்கள் கடைபிடித்த இந்த விரதத்தை நாமும் கடைபிடித்து நமது உடல் நலத்தை பாதுகாப்போம்.