இலங்கை அணியை வழிநடத்தவுள்ள தினேஷ் சந்திமால்!

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை, தினேஷ் சந்திமால் வழிநடத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய கிரிக்கெட் குழு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒருநாள் மற்றும் 20 க்கு 20 அணிகளின் தலைவராக செயற்பட்ட அஞ்சலோ மெத்தியூஸை பதவி விலகுமாறு தெரிவுக்குழு அறிவித்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மெத்தியூஸை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான காரணம் கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

கடந்த 18 மாதங்களில் இலங்கை அணியின் தலைவர்களாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உபுல் தரங்க, லசித் மாலிங், சாமர கபுகெதர மற்றும் திசர பெரேரா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை அணி பங்கேற்ற 40 ஒருநாள் போட்டிகளில் 30 போட்டிகளில் தோல்வியையே தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.