இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கென சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க முற்படும்போது, ஒரே நாளில் 18 பேர் நீரில் மூழ்கி பலியானதொக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு உருவாக்கப்ப்ட்ட பல விதமான சிலைகள் கடல், ஏரி, ஆறுகள் என நீர்நிலைகளில் கரைப்பது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது பக்தர்களும் சிலைகளுடன் நீரில் இறங்குவதால் சில நேரங்களில் அவர்களும் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் சில கிராமப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் விழாவில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராய்காட், ஜல்னா, புனே உள்ளிட்ட 9 பகுதிகளில் இருந்து 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மும்பை நகரில் இருந்து விநாயகர் சிலையை கடலில் கரைப்பதற்காக சென்ற பக்தர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆனால், விரைந்து செயல்பட்ட மீட்புக்குழுவினர் உடனடியாக 5 பேரை மீட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு கடவுளின் விழாகளை கொண்டாடுமாறு பக்தர்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது