யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தி வலயம்!

சிறிலங்காவின் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம், யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ள ஆகிய இடங்களில் உருவாக்கப்படவுள்ளது. “நாமே வளர்த்து நாமே சாப்பிவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், இந்த விவசாய அபிவிருத்தி திட்டம், முன்னெடுக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

“இந்த திட்டத்தின் கீழ் முதலாவது விவசாய அறுவடை வலயம், தம்புள்ள மற்றும் யாழ்ப்பாணத்தில் நிறுவப்படும்.

உலக வங்கியின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த விவசாய நவீனமயப்படுத்தல் திட்டத்தின் கீழ், ரிஜேசி (Tom & JC mango) வகையைச் சேர்ந்த ஒரு இலட்சம் மாங்கன்றுகள் நடுகை செய்யப்படும்.

முதற்கட்டமாக, 12500 மாங்கன்றுகள், தம்புள்ளவில் நாட்டப்படவுள்ளன.

ரிஜேசி மாம்பழம், இலகுவாக பயிரிடக் கூடியது. உலர் மற்றும் ஈரவலயங்களில்  நன்றாக வளரக் கூடியது. ஆண்டு முழுவதும் காய்க்கக் கூடியது. இதற்கு உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் நல்ல கேள்வி உள்ளது.

ஏற்றுமதிச் சந்தையை இலக்கு வைத்து இந்த மாம்பழங்களை உற்பத்தி செய்யும் போது, விவசாயிகளால் அதிக வருவாயை பெற முடியும்.

எதிர்வரும் 28ஆம் நாள், யாழ்ப்பாணம், தம்புள்ளவில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயத்தை உருவாக்கும், ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.