அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட புதிய சுற்று சுங்க வரி விதிப்புகள் நேற்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளன.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வர்த்தகப் போர் ஆரம்பமானது முதற்கொண்டு விதிக்கப்பட்ட அதி கூடிய சுங்க வரி விதிப்பாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்பிரகாரம் 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீன உற்பத்திகள் மீது புதிய சுங்கவரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீனாவால் நீதியற்ற முறையில் வர்த்தக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியே அமெரிக்கா மேற்படி சுங்க வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில் சீனா பதிலடி நடவடிக்கையாக 60 பில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்கப் பொருட்கள் மீது சுங்க வரிகளை விதித்துள்ளது.
பொருளாதார வரலாற்றிலேயே மிகப் பெரிய வர்த்தகப் போரை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதாக சீனா குற்றஞ்சாட்டுகிறது.
இந்நிலையில் சீனாவானது அமெரிக்காவுடன் மேற்கொண்டு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை இரத்துச்செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.