தமிழ் யுவதிகளை குறிவைத்து மோசடி!

பேஷ்புக் குலுக்கலில் பரிசை வென்றுள்ளதாக கூறி, பண வசதி கொண்ட யுவதிகளை ஏமாற்றி பணம் மோசடி செய்த ஒருவர் வவுனியா நகரில் இன்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலியான பேஷ்புக் கணக்கின் ஊடாக வவுனியாவை சேர்ந்த யுவதியை ஏமாற்றி 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றச் செயல்கள் விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போலி பேஷ்புக் கணக்கை ஆரம்பித்து, வடக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழ் யுவதிகளை குறிவைத்து பண மோசடி செய்துள்ளார்.

குறித்த யுவதிகளுக்கு குலுக்கல் மூலம் பரிசு கிடைத்துள்ளதாக பேஷ்புக் நிறுவனத்தின் கணக்கிற்கு இணையான போலி பேஷ்புக் கணக்கில் இருந்து தகவலை அனுப்பி பண மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குலுக்கலில் கிடைத்துள்ள பரிசை கொழும்பு துறைமுகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள சுங்க கட்டணமாக செலுத்த வேண்டும் எனக் கூறி சந்தேக நபர் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை யுவதியிடம் கோரியுள்ளதுடன் யுவதியிடம் வழங்கிய தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்யுமாறும் கூறியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் சில யுவதிகளை ஏமாற்றி இவ்வாறு பணத்தை மோசடி செய்துள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த 26 வயதான இந்த சந்தேக நபர், வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.