சென்னை கிழக்குக்கடற்கரைச்சாலை பாலவாக்கம் மணியம்மை தெருவில் வசித்தவர் ராணி(வயது 65). இவருடைய கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு பெர்னார்ட் (எ) பர்னபாஸ் (வயது 40) என்ற மகன் இருக்கிறார். ராணியின் கணவரின் மறைவுக்குப் பின் அவரது சொத்துகள் ராணியின் பெயரிலேயே இருந்து வந்துள்ளது. ராணி தனியாக வசித்து வந்திருக்கிறார்.
பர்னபாஸ் தனியாக குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். பர்னபாஸுக்கு நிலையான வேலை இல்லாததால் வருமானம் இல்லை. பர்னபாஸ் ராணியிடம் சொத்தை தன் பெயருக்கு மாற்றித்தரும்படி அடிக்கடி தொந்தரவு கொடுத்திருக்கிறார். நான் உயிருடன் இருக்கும்வரை சொத்தை மாற்றித்தர முடியாது என்று ராணி மறுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்றும் இதே பிரச்சினையில் தாய்க்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒரு கட்டத்தில் நான் உயிரோடு இருக்கும்வரை சொத்தை மாற்றித்தரமாட்டேன் என தாயார் ராணி சொல்ல அதனால் கடுமையான ஆத்திரமடைந்த மகன் பர்னபாஸ் அருகிலிருந்த கட்டையால் தாய் ராணியின் தலையில் ஓங்கி அடிக்க அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தப்பி ஓடிய பர்னபாஸுவை தேடிப்பிடித்து கைது செய்தனர்.