பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி விழுப்புரம் வடக்கு மாவட்ட குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் நகராட்சி மைதானத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மத்திய குழு வாசுகி, மாநில செயற்குழு நூர்முகம்மது, அரசியல் தலைமை குழு ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து பங்கேற்று பேசினார்.
அப்போது, நாளுக்கு நாள் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பா.ஜ.க.வினர் தமிழகத்தில் சிலரை பேசவிட்டு பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனர். பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார். ஆனால் தமிழக அரசு இதுவரை அவரை கைது செய்யவில்லை.
ஆனால் பா.ஜ.க.வை விமர்சிப்பவர்கள் மட்டும் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். எச்.ராஜாவை போலீசார் கைது செய்யாவிட்டால் நாங்களே அவரை பிடித்து போலீசில் ஒப்படைக்கும் நிலை உருவாகும் என்று அவர் பேசினார்.