ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி, ஊட்டல்மலை கானாறு கரையில் நெமிலியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு அருகே மரம் விட்டு, மரம் தாவும் போது மின்கம்பியில் சிக்கி பெண் குரங்கு ஒன்று பலியானது. இதனை கண்ட வன்னியநாதபுரம் இளைஞர்கள் மின்சாரத்துறை ஊழியர்களுடன் சேர்ந்து, உயிரிழந்த குரங்கின் உடலை மீட்டனர்.
இதனையடுத்து தென்னை ஓலையில் பாடைக்கட்டி இறந்தவர்களுக்கு செய்யும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்து, பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் இறுதி ஊர்வலம் நடத்தி, குரங்கின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
மனிதர்கள் இறந்து போனாலே அனாதை பிணமாக விட்டு செல்லும் நிலையில் இறந்த குரங்குக்கு முறையாக இறுதி சடங்கு செய்து, அடக்கம் செய்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் வியப்பை ஏற்படுத்தியது.