டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு ‘கோ ஏர்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 150 பேர் பயணம் மேற்கொண்டனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது 27 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென அவரது இருக்கையில் இருந்து எழுந்தார். பின்னர் கழிவறை என்று நினைத்து விமானத்தின் பின்புற கதவை திறக்க முயற்சி செய்தார்.
அதைபார்த்த சக பயணி அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். உடனே அங்கு வந்த விமான ஊழியர் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தினார். கேபின் அறையின் காற்றழுத்தம் அதிகமாக இருந்ததால் விமானத்தின் கதவை அவரால் திறக்க இயலவில்லை. இல்லாவிடில் மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்.
இச்சம்பவம் கடந்த 22-ந்தேதி(சனிக்கிழமை) நடந்தது. இந்தநிலையில் விமானம் இரவு 7.35 மணிக்கு பாட்னா விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதையடுத்து அந்த வாலிபரை தொழிற் பாதுகாப்பு படையினரிடம் விமான ஊழியர்கள் ஒப்படைத்தனர். பின்னர் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து விமான நிலைய போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்.