பேரறிவாளன் சிறை விதிகளின்படி விடுதலைப் பெற வேண்டியவர்!”

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம்” என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது.

அதையடுத்து, கடந்த 9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஏழு பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அந்தப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆன நிலையில், அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதிகாத்து வருகிறார் தமிழக ஆளுநர்.

இந்த ஏழு பேரின் விடுதலை விவகாரம் அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அந்தச் சந்திப்பின்போது, அவருடைய மகனை விடுதலை செய்வதற்கான சட்டரீதியிலான காரணங்களைக் கோரிக்கையாக ஆளுநரிடம் மனுவாக முன்வைத்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து அற்புதம்மாளிடம் பேசியபோது, “ஏழு பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தைத் தமிழக அரசு நிறைவேற்றியபோதே நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று ஆளுநரைச் சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பு எனக்கு மிகுந்த நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்துள்ளது.

என் பிள்ளையை விடுதலை செய்ய, சட்டரீதியான முகாந்திரங்கள் இருந்தும், விடுவிக்காமல் காலம் தாழ்த்தியதே மிகவும் வருந்தத்தக்கச் செயல். இனிமேலும் தாமதிக்காமல் அவனை விடுதலை செய்யுங்கள். குற்றமற்ற குடும்பத்தில் இருந்தவந்த அவனுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று கூறினேன்.

அனைத்தையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்ட ஆளுநர், ‘சட்டவிதிகளின்படியே நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறினார். அவருடைய அந்தப் பேச்சு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. என் மகன் என்னிடம் வரும் நாள்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார் நம்பிக்கையுடன்.

இதுகுறித்து பேசிய பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமார், “பேரறிவாளன் சிறையில் இருப்பதற்கு முக்கியக் காரணம், அவர் கொடுத்த வாக்குமூலம்தான். அந்த வாக்குமூலத்தைப் பதிவுசெய்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் தவறாகப் பதிவுசெய்ததன் விளைவாகவே அவர் சிறையில் இருக்கிறார்.

இதை, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாகவே தியாகராஜன் பதிவுசெய்துள்ளார். அந்தப் பிரமாணப் பத்திரத்தில், ‘ராஜீவ் காந்தி கொல்லப்படுவது பேரறிவாளனுக்குத் தெரியாது’ என்பதை நீதிமன்றத்திலேயே கூறியுள்ளார்.

அதேபோன்று, பேரறிவாளன் உட்பட ஏழு பேருக்குத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.டி.தாமஸ், அவர் நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்றபின் அந்தத் தீர்பை விமர்சித்துப் பேசியுள்ளார்.

‘இந்தத் தீர்ப்பு வழங்கும்போது எங்களுக்குக் கடுமையான அழுத்தம் இருந்தது’ என்று கூறியுள்ளார். மேலும் அவர், ‘இது ஒரு பிழையான தீர்ப்பு’ என்றும், ‘அந்தப் பிழையை சரிசெய்ய  வேண்டியது இந்தச் சமூகத்தின் பொறுப்பு’ என்றும் கூறியிருந்தார். இதுபோன்ற சட்டரீதியிலான தகவல்களைச்  சுட்டிக்காட்டி அவரை விடுதலை செய்வதில் சிக்கல் இல்லை என எடுத்துரைத்தோம். அனைத்தையும் முழுமையாகக் கேட்டுக்கொண்ட ஆளுநர்,

நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். ஆளுநர் எங்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் போதுமான நேரம் வழங்கி அனைத்தையும் மிகவும் கவனமாகக் கேட்ட அந்தச் சூழலை எண்ணும்போது பேரறிவாளன் நிச்சயம் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார் மிகத் தெளிவாக.

பேரறிவாளன் விடுதலை பற்றிப் பலரும் பேசும் இந்த வேளையில், ‘சிறையில் அவருடைய நடவடிக்கை எப்படி இருக்கிறது’ என்பது குறித்து, ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி ராமச்சந்திராவிடம் பேசினோம்.

இவர், பேரறிவாளன் இருந்த சிறையில் 16 ஆண்டுக்காலம் சிறைத்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். “பேரறிவாளனைச் சட்டரீதியாக விடுவிப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளன. ஏழு பேரையும் இத்தனை ஆண்டுகள் சிறையில் வைத்திருந்ததே தவறு.

பொதுவாக, ஒரு கைதி ஒருமுறை சிறைக்கு வந்துவிட்டால், அந்தக் கைதிக்குச் சிறைவிதிகள் மட்டுமே பொருந்தும். ஆனால், இந்த வழக்கு சர்வதேச அளவில் தொடர்புடையது என்பதால், அவர்களை இத்தனை ஆண்டுகள் சிறையில் வைத்திருக்கிறார்கள். அப்படி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை

மேலும் மற்றொரு கோணத்தில் பார்த்தால், இந்த வழக்கில் நேரடியாகப் பேரறிவாளனுக்குத் தொடர்பில்லை என்பது நாடறிந்த உண்மை. வெளியில் வருவதற்கு சட்டரீதியிலான முகாந்திரங்கள் இருக்கின்றன.

மேலும் பேரறிவாளன், தனது தண்டனைக் காலத்தை மிகுந்த நன்னடத்தையோடு கழித்து வந்துள்ளார். தண்டனைக் காலத்தில் அவர்மீது குறைசொல்வதற்கு எதுவுமே இல்லை.

அறிவு என்ற பெயருக்கு ஏற்றவாறு செயல்படுபவர் பேரறிவாளன். எப்போதுமே நியாயமான முறையில் விவாதங்கள் இருக்கும். குற்றவாளிக்கான எந்த ஒரு சிறு நடவடிக்கையையும் நான் பேரறிவாளனிடம் பார்த்ததில்லை.

ஒரு நல்ல குடும்பத்தில் இருந்துவந்த பையனுடைய பழக்க வழக்கங்கள்போலவே அவருடைய நடவடிக்கைகள் இருக்கும். எனவே, பேரறிவாளனை விடுவிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

அப்படியே விடுதலைக்குப் பிறகு நடவடிக்கையில் தவறுகள் ஏதேனும் தெரியவந்தால் இதே வழக்கில் மீண்டும் அவரைச் சிறைக்குக் கொண்டுவரலாம். அதனால், சிறை விதிகள்படி பேரறிவாளன் முழுமையான விடுதலைப் பெற வேண்டியவர்” என்றார்.

இனிமேலாவது பேரறிவாளனுக்கு விடிவுகாலத்தைத் தருவாரா தமிழக ஆளுநர்?