வருகின்ற 2019 ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதில் காங்கிரஸ் முந்திக்கொண்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறது. பாஜகவும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதற்கிடையே திமுக., பாஜகவுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வந்தன. அதே சமயத்தில் அதிமுகாவுடனும் பாஜக கூட்டணி வைக்க உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கான உயர்மட்ட குழுவானது அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அமைக்கப்பட்டது. அந்த குழுவில் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, அகமது படேல், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களிடம், முதல்கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எந்தெந்த மாநிலங்களில், எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகிறது.
இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், சட்டமன்ற குழு தலைவர்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி பங்கேற்க உள்ளனர்.