மூன்று இலட்சம் பேர் படுகொலைக்கு இவர்தான் காரணம்! – மனம் திறந்த ஆனந்த சங்கரி

கடந்த யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட 3 லட்சம் பேரின் மரணத்திற்கு காரணம் சம்பந்தனும் மாவையுமே, அவர்களே அதற்குப்பொறுப்பு, பிரபாகரனைக் கோபிக்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் 1959ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபட ஆரம்பித்தேன், கிட்டத்தட்ட 60 வருட அனுபவமுண்டு, நான் யாரையும் காட்டிக்கொடுத்ததில்லை, பதவிதேடி அலையவுமில்லை, ஆனால் துரோகி என்று அழைப்பார்கள். சம்பந்தன் சரியாகவிருந்தால் நான் எம்.பி பதவியை இழந்திருக்கமாட்டேன்.

2009 யுத்தம் நிறைவடைய முன்னர் கிளிநொச்சி பறிபோனதும் தம்பி பிரபாகரனுக்கு நீண்ட கடிதமொன்றை எழுதினேன். மூன்றரை லட்சம் மக்களின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள். இந்த யுத்தத்தை வெல்லமுடியாது. இந்த மக்களின் சாபத்தில் சாகப்போகிறீர்கள். எனவே பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று எழுதினேன்.

அவர் ‘செய் அல்லது செத்துமடி’ என்ற கொள்கையிலுள்ளவர். உயிர் பெரிதல்ல மானம் பெரிது என்ற கொள்கையிலுள்ளவர். அதனால் அவர் கேட்கவில்லை. நடந்ததை அறிவோம். அதற்காக இந்த 3 அரை லட்சம் மக்களின் படுகொலைக்கு அவரில் கற்றம் காணமுடியாது. அவரைக்கோபிக்க முடியாது.

ஆனால் இதனைத்தடுத்து நிறுத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பும் கடமையும் த.தே.கூட்டமைப்பிற்கு இருந்தது. ஆனால் அவர்கள் போனையும் ஓவ் பண்ணிவிட்டு வாளாவிருந்தார்கள். சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் இந்தக் கொலைகளுக்கு முக்கிய காரணம். அவர்களே பொறுப்புக்கூறவேண்டும்.

அன்று ஜனாதிபதிபதியாகவிருந்த மஹிந்த அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசினார். அதற்கு த.தே.கூட்டமைப்பு வரவில்லை. அந்தக்கூட்டத்தில் சுமார் 30 ஆயிரம் மக்கள் சிக்குண்டுள்ளனர், அவர்களை நாம் காப்பாற்ற வேண்டும் என்றார்.

நான் அதனை மறுத்து அது 3 அரை லட்சம்பேர் என்றேன். அவர் ஆச்சரியப்பட்டார். நான்தான் இந்த 3 அரை லட்சம் மக்களின் துயரம் பற்றி எடுத்துரைத்தேன். அதற்காக என்மீது மஹிந்த கடுப்பானார். அதற்காக நான் விட்டுக்கொடுக்கவில்லை.

பின்பு இந்தியா மற்றும் பிரிட்டன் அழைப்புவிடுத்தன. அத்தனை வாய்ப்புகளையும் அவர்கள் தவறிவிட்டார்கள். நடந்தது என்ன? அத்தனை மக்களையும் இழக்கநேரிட்டது. எனவே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் த.தே.கூட்டமைப்பின் சம்பந்தரும் மாவையுமே தவிர வேறு யாருமல்ல.

சரத்பொன்சேகா விவகாரம், புலிகளை ஒளிக்கக்கூட சிறு இடமில்லாமல் அழிப்பேன் என்றும் யுத்தத்தில் புலிகளை பூண்டோடு அழிப்பேன்’ என்றுகூறி களத்தில் நின்ற சரத்பொன்சேகாவிற்கு சம்பந்தன் ஆதரவு கொடுத்தார். எவ்வளவு வெட்கக்கேடான விசயம். தமது இனத்தையே அழித்த ஒருவருக்கு ஆதரவு அளிக்குமாறு கோரியது துரோகமில்லையா?

18.05.2009 இல் யுத்தம் மௌனிக்கின்றது. 2010 ஜனவரியில் சம்பந்தன் பத்திரிகைளில் தலைப்புச்செய்தி வெளியிடுகிறார். ‘எமது மக்களின் நலன்கருதி சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்தோம்’ இதுதான் அந்தச்செய்தி.

தராகி 2004.01.11ஆம் திகதி சகல தமிழ்க் கட்சிகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் உதயசூரியன் சின்னத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிட புலிகளின் தயவுடன் அழைத்தார். அனைவரும் ஒன்றுபட்டார்கள்.

17ஆம் திகதி மாவையும் சம்பந்தரும் வன்னிசென்று தமிழ்ச்செல்வனுடன் பேசி ஆளுக்கொரு நியமனப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு உதயசூரியனுக்கு வேட்டுவைத்தார்கள்.

என்னை வாக்குக்கேட்கவோ பிரசாரம் செய்யவோ அனுமதிக்கவில்லை. அத்தேர்தலில் புலிகளின் தயவால் வீட்டுச்சின்னதில் 22 பேர் நாடாளுமன்றம் போனார்கள். கண்ட பலன் என்ன?

அன்று ஒற்றுமைப்பட்டிருந்தால் இன்று அதன் நன்மை தெரிந்திருக்கும். இந்த யுத்தமே நடந்திருக்காது. இத்தனை உயிர்களும் இழந்திருக்காது. 2004 முதல் 2009 பாரியயுத்தம் நடக்கும்வரை பலர் கொல்லப்பட்டார்கள். 1678 பேர் காயப்பட்டார்கள். 84 பேர் காணாமல் போயிருந்தார்கள். ஒற்றுமைப்பட்டிருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டதல்ல. அதன் முதல் தலைவர் நானே. இது புலிகளால் உருவாக்கப்பட்டது என பூச்சாண்டி காட்டி வருகின்றார்கள்.

நான் இனத்துவேசம் பேசுபவனல்ல. பொய் பேசுபவனல்ல. யதார்த்தவாதி. அதுதான் அவர்களுக்குக் கசக்கிறது. இப்பவும் கூறுகிறேன் த.தே.கூட்டமைப்போ என்னவோ தமிழர் ஒற்றுமைப்படாவிட்டால் தமிழ் மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.