மேற்கு வங்கத்தில் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில், 2 மாணவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு தீனஜ்பூர் மாவட்டல், இஸ்லாம்பூர் எனும் பகுதியில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது மாணவர்களுக்கும் போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், மாணவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் இன்று (26.9.2018) 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் அமைப்புகள் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.
மாநிலத்தில் பல பகுதிகளில் சாலை மறியல், இரயில் மறியல் என தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஒரு சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்து ஓட்டுனர்கள் தலைக்கவசம் அணிந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக அம்மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.