சற்றுமுன்: கருணாஸுக்கு ஜாமீன்.?

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், எம்.எல்.ஏ-வுமான நடிகர் கருணாஸ், காவல்துறையினரையும், தமிழக முதல்வரையும், மற்ற சமுதாயங்களையும் இழிவாக பேசியதாக நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து அவர் மீது, ஐபிசி 153, 153(A)(1)(b)(c),307, 506(i),120(b), சிட்டி போலீஸ் ஆக்ட் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கருணாஸ் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அவரை கைது செய்ய அனுமதி கேட்டு சபாநாயகருக்கு கமிஷனர் அலுவலகம் கடிதம் எழுதி நேற்று முன்தினம் அதிகாலை கருணாசை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கருணாஸ் தரப்பில் ஜாமீன் மனு அளிக்கப்பட்டது. அதேபோல், கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று வர உள்ளது.

இந்நிலையில், கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பாக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணை சற்றுமுன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது.

இதனை விசாரணை செய்த நீதிபதி, கருணாஸை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி அளிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதேபோல் கருணாஸ் ஜாமீன் மனுமீதான விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.