தமிழ் ஈழ படுகொலைக்கு காரணமான தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியா போது, ”தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை திரட்டி வந்து புதுக்கோட்டையில் டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டம் நடத்தினார்.
டிடிவி தினகரன் புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் பேசும்போது என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி உள்ளார். துணிவு இருந்தால் வரும் பொதுத்தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் என்னை எதிர்த்து அவர் போட்டியிட்டு ஜெயிக்க தயாரா? என சவால் விட்டு கேட்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் நாகப்பட்டினத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின் தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்தபோது, ”வரும் திருவாரூர் இடைத்தேர்தலில் எனது வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா.?” என்று அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சவாலுக்கு சவால் விடுத்துள்ளார்.