வடக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடுத்த முறையும் முதலமைச்சர் பதவி தொடர்பாகச் சிந்திப்பது தெரிகின்றது. அவ்வாறில்லாவிட்டால் கூட்டமைப்பின் தலைமை பதவி விலகினால் முதலமைச்சர் வேட்பாளராகக் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்குவேன் என அவர் கூறியிருக்கமாட்டார்.
கூட்டமைப்பையும் கூட்டமைப்பின் தலைமையையும் தாக்கிப்பேசி வருவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில் தற்போது இத்தகைய கருத்தை அவர் வெளியிட்டுள்ளமை கவனத்துக்குரியது. கூட்டமைப்பின் தலைமையைப் பதவி விலகிவிடுமாறு அந்த அமைப்பைச் சேர்ந்த எவருமே கோரிக்கை விடுத்ததில்லை.
முன்னர் கூட்டமைப்பில் இணைந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும், சிவசக்தி ஆனந்தன் போன்ற வர்களும் கூட்ட மைப்பின் தலைமை தொடர்பாக எதிர்க் கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளனர். அவர்கள் இப்போது கூட்டமைப்பில் இல்லை. ஆனால் கூட்டமைப்பில் இருந்துகொண்டே அதை மோசமாக விமர்சித்து வருகிறார் விக்னேஸ்வரன்.
கூட்டமைப்பில் இருந்து அவர் முதலில் விலகலாமே?
மக்கள் பலம் தம்முடன் இருக்கும்வரையில் தம்மை எவராலும் அசைத்துவிட முடியாதென அவர் அடிக்கடி கூறி வருகின்றார். அவருக்கு எதிராகத் தமிழ் அரசுக் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது அவருக்கு ஆதரவாக மக்கள் கூட்டம் திரண்டிருந்தது உண்மைதான். ஆனால் அந்தக் கூட்டம் அவருக்கு உரியதல்ல. தமிழ் அரசுக் கட்சிக்கும், கூட்ட மைப்புக்கும் எதிரான கூட்டம்தான் அது. இதை அவர் தவறாகப் புரிந்து கொண்டமை அவரது அரசியல் அனுபவமின்மையை எடுத்துக் காட்டுகின்றது. கூட்டமைப்பும், அதன் தலைமையும் சரியில்லையென்றால் அங்கிருந்து வெளியேறிவிடுவதற்கு அவர் ஏன் தயங்குகிறார்? அவர் இன்னமும் கூட்டமைப்பில் ஒட்டிக்கொண்டிருப்பது எவருக்குமே புரியாத மர்மமாக நீடிக்கின்றது.
தனது செல்வாக்காகக் கருதமுடியுமா?
2013ஆம் ஆண்டுத் தேர்தலில் வட பகுதி மக்கள் விக்னேஸ்வரன்தான் முதலமைச்சர் பதவியில் அமரவேண்டுமென ஒருபோதுமே கேட்டதில்லை. பெரும்பாலானவர்கள் அவரை அறிந்திருக்கவுமில்லை. கூட்டமைப்பின் தலைவர்தான் அவரை அரசியலுக்குள் கொண்டு வந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த விடயம். அவரொரு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் என்ற வகையில் அவர்மீது வடபகுதி மக்கள் நம்பிக்கைவைத்துத் தமது வாக்குகளை அமோகமாக அள்ளி வழங்கினார்கள். இதை விக்னேஸ்வரன் தனது சொந்தச் செல்வாக்காகக் கருத முடியுமா?
தம்மிடம் நான்கு தெரிவுகள் இருப்பதாகவும் அவற்றில் ஒன்றை விரைவில் தெரிவு செய்யப் போவதாகவும் அவர் முன்பொரு தடவை தெரிவித்திருந்தார். அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுப்பது, தனிக்கட்சி தொடர்வது, வேறொரு கட்சியுடன் இணைந்து செயற்படுவது, தமிழ்மக்கள் பேரவையின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து உழைப்பது ஆகிய நான்குமே அந்தத் தெரிவுகளாகும். தற்போது கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கப் போவதாகக் கூறுகிறார். அவரை இனியாவது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டமைப்பில் இருந்து விலகி விக்னேஸ்வரன் தம்முடன் இணைந்து செயற்படுவாரென அவர் கனவு காண்கிறார். ஆனால் விக்னேஸ்வரன் அவருக்கு அல்வா கொடுக்கும் வகையில் நடந்து கொள்கின்றார்.
பங்காளிக் கட்சிகள் கவனமெடுப்பது நல்லது
கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சியினரும் தற்போதைய முதல்வரை நன்கு எடைபோட்டு வைத்திருக்க வேண்டும். அண்மையில் புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். நாமே விக்கி னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் அமர்த்திவிட்டு அவருக்குத் தொல்லை கொடுப்பது சரியல்லவென அவர் கூறியிருந்தார். ஆனால், பிரச்சி னைகள் ஏற்படுவதற்கு மூலகாரணமாக இருந்தவர் விக்னேஸ்வரனே என்பதை அவர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டுமெனக் கூறுவதற்கு விக்னேஸ்வரனுக்குள்ள தகுதிப்பாட்டைப் பரிசீலிப்பதும் சிறந்தது. அந்தத் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு இவர் விரும்புகின்றாரோ என்றும் கருத வேண்டியுள்ளது. கூட்டமைப்பைத் தாங்கிப்பிடித்துள்ள மக்கள்இவரைத் தமது தலைவராக ஒருபோதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆக, விக்னேஸ்வரனின் சுயரூபம் தற்போது தெளிவாகத் தெரிந்து விட்டது. அவரைத் தலையில்தூக்கி வைத்துக் கொண்டாடுகின்ற சிறுபகுதியினருக்கும் இது புரிந்தி ருக்குமென நம்பலாம்.