மக்களவை துணை சபாநாயகரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை அவருடைய தொகுதியில் ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆய்வு குறித்த பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் நிலவி வருகிறது. அந்த தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ வாக இருந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி, நீக்கப்பட்டதிலிருந்து அந்த தொகுதியை யாரும் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது.
இதனை கண்டித்து வரும் 20 ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டன உண்ணாவிரதம் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கழக அமைப்பு செயலாளருமான வி.செந்தில் பாலாஜி, அறிவித்து இருந்தார். .
இதன் காரணமாகவே அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை கடந்த12ம் தேதி மாலை முதல் அனல்பறக்கும் சுற்று பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகின்றார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் யார் என்ன ஆனாலும் தன் அரசியல் இருப்பை காட்டுவதற்காகவே தன் தொகுதியை தக்கவைக்க இந்த மக்களை சந்திக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதில் தினகரன் கட்சி அறிவித்த போராட்டம் கொஞ்சம் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டு தினகரன் கட்சி சார்பில் காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை என்ன செய்வது என புரியாமல் அனுமதி கடிதத்திற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார்கள்.
இதனை எதிர்த்து அனுமதி கேட்டு தினகரன் கட்சி சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளித்து இடங்களையும் குறிப்பிட்டு உத்தரவிட்டது. இதனால் தினகரன் ஆதரவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு வேகமாக தயாராகி வந்தார்கள்.
இந்நிலையில் போராட்டத்தினை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாளாக போராட்டத்தை அறிவித்திருந்தார். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அம்முக அமைப்புச் செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து தடை ஆணை வழங்கியது. இதை எதிர்த்து, தமிழக அரசின் காவல்துறை மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக அவர் தெரிவித்தார்.
வழக்கு தொடர்ந்த அவருக்கு போராட்டத்திற்கான அனுமதியை நீதிமன்றம் மீண்டும் வழங்கியுள்ளது. இதனால் தினகரன் தரப்பு உற்சாகமாக மீண்டும் பணியாற்ற ஆரம்பித்துள்ளது.