கருணாஸ்க்கு வந்த மற்றுமொரு சோதனை, மேலும் பாய்ந்த இரு வழக்குகள்.!

நடிகரும், திருப்புவனம் தொகுதியின் எம்.எல்.ஏவுமான கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரையும்,போலீஸ் துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து போலீசார் கொலை மிரட்டல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 23-ந்தேதி கருணாசை கைது செய்தனர்.

இந்நிலையில் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தாக்கல் செய்த மனு இன்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையும் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்டத்தில், கருணாஸ் எம்.எல்.ஏ.வும், அவரது தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினரும் கிரிக்கெட் ரசிகர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளின் அடிப்படையில் மீண்டும் கருணாஸ் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனவே அவருக்கு முதல் வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் வெளியே வரமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ கருணாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கு ஒருசில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.