தினமும் முட்டை சாப்பிடுவது சரியா? என்று சிலருக்குத் தயக்கம் இருக்கும். ஆனால் தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். குறிப்பாக வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வைட்டமின் ஏ, பி, சி என உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் இதில் இருக்கின்றது. மேலும் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் இருக்கின்றது.
ஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் போதுமானது. உடல் உழைப்பு அதிகமான வேலைகளில் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை வெள்ளை கரு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அது நான்கு முட்டைகள் வரை சாப்பிடலாம். இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட வேண்டும். மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை அதிகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அளவு அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும். எனவே மஞ்சள் கரு சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.
உடற்பயிற்சிகள் செய்துவிட்டு அதன் பின்னர் முட்டை சாப்பிடுவது, உடல் வலிமையைக் அதிகரிக்கும். உடலில் ஏற்கனவே கொலஸ்ட்ரால் தொந்தரவு இருப்பவர்கள் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள், தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம். அதிக உடல் எடை கொண்டவர் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.