சாதாரணதர,உயர்தர பரீட்சைகள் டிசம்பரில்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதனால் மாணவர்கள் கால தாமதம் இன்றி உயர் தரக் கல்விக் கல்வியை தொடர முடியும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பின்னர் உயர் கல்வியை தொடர்வதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. உயர் தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழத்தில் அனுமதி பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், மாணவர்களின் முக்கியமான காலம் வீண் விரயமாவதாக அமைச்சில் நேற்றுமுன்தினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக மூடப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையை இயலுமான வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எதுவித தடைகளும் ஏற்படாத வகையில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அறிவுரைகளை அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் என்று இங்கு உரையாற்றிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியெய்திய பின்னர் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு இடைப்பட்ட காலத்தை பயனுள்ளதாக கழிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவ்ர் மேலும் தெரிவித்தார்.