இந்துக்களுக்கு மட்டுமே தமிழகத்தில் கட்டுப்பாடு : தமிழிசை

நேற்று ஆலங்குளத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு தமிழிசை சவுந்தரராஜன் உரை ஆற்றினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது. அது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க கோரி பாஜக சார்பில் நேற்று ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்ட போராட்டம் நடந்தது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துக் கொண்டு பேசினார்.

தமிழிசை அந்த கூட்டத்தில், “யாருக்கும் விநாயகர் ஊர்வலத்தை தடை செய்ய உரிமை கிடையாது. இந்த மாநிலத்தில் 90% இந்துக்கள் வசித்து வருகின்றனர். அப்படி இருக்க இந்த தெரு வழியாக போகாதே, அந்த தெருவின் வழியாக போகாதே என தடை செய்ய யாருக்கும் உரிமை இலை.

எங்கள் கொடிகளை கட்டிக் கொண்டு நெடுஞ்சாலையில் செல்லக் கூடாது எனப்தற்கு என்ன அர்த்தம் என புரியவில்லை. இந்து சகோதரர்களின் பரந்த மனப்பான்மையால்தான் நெல்லை அமைதியாக உள்ளது. அப்படி இருக்க இந்துக்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

தாமிரபரணி புஷ்கர விழா நடைபெறும் போது அனைத்து படித்துறைக்கும் செல்ல எங்களுக்கு உரிமை உண்டு. அங்கு போகாதே, இங்கு போகாதே என தடை விதிப்பது தவறு. நாங்கள் செல்லும் படித்துறைக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என பேசி உள்ளார்.