DMK கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது நல்ல உடல் நலத்துடன், மகிழ்ச்சியாக இருக்கிறார் என ம.தி.மு.க தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின், பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனை முடிந்து உடனடியாக ஸ்டாலின் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை, ஸ்டாலின் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், `தி.மு.க தலைவர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார். அவர், வலது பக்க கால் தொடையில் இருந்த நீர்க்கட்டியை அகற்ற, சிறிய அளவிலான அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இன்று மதியம் அவர் வீடு திரும்புவார்’ என்று தெரிவித்தது.
இதையடுத்து, அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ம.தி.மு.க தலைவர் வைகோ இன்று அப்பல்லோ மருத்துவ மனைக்கு நேரில் சென்றார். ஸ்டாலினை சந்தித்த பின்னர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திராவிட முன்னேற்ற கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று சாதாரணை மருத்துவ பரிசோதனைக்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நல்ல உடல்நலத்துடன், மகிழ்ச்சியாக இருக்கிறார். அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசினேன். மேலும் அவரது குடும்பத்தாரிடமும் பேசினேன். அவர் விரைவில் வீடு திரும்புவார்” என்று கூறினார்.