தனுஷ், விஷாலுடன் நேரடி மோதலில் விவேக்!

கதையின் நாயகனாக விவேக், மற்றும் தேவயானி நடித்துள்ள படம்  எழுமின். இந்த படம் சண்டக்கோழி 2, வடசென்னை படங்கள் ரிலீசாகும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகிறது.

“வையம் மீடியாஸ்” சார்பில் வி.பி.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. இந்த படத்தில் கதையின் நாயகனாக விவேக்கும், அவருடன் கதையின் நாயகியாக தேவயானியும் நடித்துள்ளனர். மேலும் அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படம்  வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள நோட்டா திரைப்படம் அதே தேதியில் வெளியாவதால், ரிலீசில் பிரச்சினை ஏற்பட்டு,  தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உருவானது. இதனால் தயாரிப்பாளர் விஜி தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டார். இதையடுத்து, கவுன்சிலில் சமரச பேச்சு நடத்தப்பட்டது. ஆனால் அதில் சமரசம் ஏற்படவில்லை.

இந்நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டிருப்பதாக வி.பி.விஜி தெரிவித்துள்ளார். தியேட்டர்கள் கிடைக்க விஷால் உறுதியளித்ததைத் தொடர்ந்து, வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி விடுமுறை தினத்தில் எழுமின் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில்தான் தனுஷ் நடித்திருக்கும் “வடசென்னை” திரைப்படமும், விஷால் நடித்துள்ள “சண்டக்கோழி2” திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. எனவே விஷாலுடனும், தனுஷுடனும் பல படங்களில் சேர்ந்து நடித்த விவேக், அவர்களுடன் நேருக்கு நேர் மோத தயாராகிவிட்டார்.