திருபாய் அம்பானி மிக உயர்ந்த நோக்கம் கொண்டவர். இவர் தான் மட்டும் உயர வேண்டும் என்று எப்போதும் நினைத்தவரல்ல. தன் நிறுவனத்தின் பங்குதாரர்கள் முதல் பணிபுரியும் ஊழியர்கள் வரை அனைவருக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தவர். 1986ல் இவர் நடத்திய பங்குதாரர்கள் மாநாட்டிற்கு, உலகமே வியக்கும் வகையில் சுமார் 30,000 பங்குதாரர்கள் பங்கேற்று பிரம்மிக்க வைத்தனர்.
அதிலும் 1990க்குப் பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் அசுர வளர்ச்சி கண்டது. டெக்ஸ்டைல் மட்டுமல்லாது பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உற்பத்தி, தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை, துணி உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், சரக்கு போக்குவரத்து என பல்வேறு துறைகளில் தடம் பதித்தது. இன்று உலகின் மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் திகழ்கிறது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாளராக, பாம்பே டையிங் நிறுவனத்தின் நஸ்லி வாடியா திகழ்ந்தார். நஸ்லி வாடியா மற்றும் திருபாய் அம்பானி இருவருமே அரசியல் வட்டங்களில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள் தான்.
நாட்கள் கடந்து செல்லச் செல்ல ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு எதிராக, தொடர்ச்சியான பல கட்டுரைகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட துவங்கியது.
இதனிடையே திருபாய் அம்பானி கூடுதலான அங்கீகாரத்தையும், புகழையும் பெற்றுக் கொண்டிருந்தார்.
திருபாய் அம்பானி முடக்குவாத நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிக்கைகள், செய்தித்தாள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவற்றின் உதவிகள் மற்றும் எதிர்ப்புடனும் திருபாய் அம்பானி தனது நிறுவனத்தை உலக அறியச் செய்தார். இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் திருபாய் அம்பானி.
இந்தியாவின் தற்போதைய பங்குச்சந்தை வளர்ச்சிக்கு மேடை அமைத்துக் கொடுத்த அத்தனை பெருமையும், ரிலையன்ஸ் நிறுவனத்தையே சாரும்.
உலக வணிகச் சந்தையில் மாபெரும் இடம்பிடித்த ரிலையன்ஸ் நிறுவனத்தை தனது மூளையால் செதுக்கிய திருபாய் அம்பானி, 2002-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி தனது 69வது வயதில் மறைந்தார்.
எதிர்ப்புகள் பல வந்தபோதிலும் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியால் வெற்றி பெற்றவர், திருபாய் அம்பானி. இவரைப்போல நாமும் தோல்விகள், எதிர்ப்புகள் வந்தாலும் அதை அனைத்தையும் தாண்டி சாதிக்க வேண்டும்.