இந்தியா பாக்கிஸ்தானிற்குள் புகுந்து மீண்டும் ஓரு தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சூசகமாக தெரிவித்துள்ளார்.
காஸ்மீரில் கடந்த 18 ம் திகதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் மீது பாக்கிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
எல்லை தாண்டி உள்ளே சென்ற பாக்கிஸ்தான் வீரர்கள் நரேந்திர சிங் என்ற இந்திய வீரரின் உடலை கொண்டு சென்றதுடன் அவரின் கழுத்தை அறுத்திருந்தனர்.
இதற்கு மறுநாள் இந்திய படையினர் அவரின் உடலை மீட்டிருந்தனர்.
இதேவேளை இந்த தாக்குதலிற்கு பதிலடி கொடுக்கும்; வகையில் இந்தியா பாக்கிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஸ்மீர் பகுதிக்குள் நுழைந்து தாக்குதலொன்றை மேற்கொண்டுள்ளது என இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சூசகமாக தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான் நாட்டிற்கு இந்தியா பயங்கர பதிலடியை கொடுத்துள்ளது,சில அதிரடிகள் நடந்துள்ளன,எதிரிகளிற்கு பயங்கர இழப்பு ஏற்பட்டுள்ளது என்ன நடந்தது என தற்போது தெரிவிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்களில் என்ன நடந்தது என்பது உங்களிற்கு தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா பாக்கிஸ்தானிற்குள் புகுந்து மேற்கொண்டுள்ள இரண்டாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
2016 இல் இந்தியா இதேபோன்ற ஒரு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை பாக்கிஸ்தானிற்குள் புகுந்து இந்திய இராணுவத்தினர் 2016 இல் மேற்கொண்ட துல்லிய தாக்குதல் தொடர்பான வீடியோவை இந்தியா வெளியிட்டுள்ளது.
பாக்கிஸ்தானிற்குள் புகுந்து இந்திய இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டு இரண்டு வருடங்களாவது குறி;க்கும் விதத்திலேயே இந்தியா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
2016 ம் ஆண்டு காஸ்மீர் எல்லைக்கோட்டிற்கு அருகே காணப்பட்ட தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய இராணுவத்தினர் ஊருடுவி அழித்திருந்தனர்.
இந்தியாவின் உரி பகுதியில் உள்ள இராணுவமுகாமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கு பதிலடியாகவே இந்திய படையினர் இந்த தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்திய இராணுவத்தின் விசேட படையணியை சேர்ந்த கொமாண்டோக்கள் குழுவொன்று தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலிற்கு பயன்படுத்திய முகாம்கள் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே இது குறித்த வீடியோவை இந்தியா இன்று வெளியிட்டுள்ளது.
டிரோன் கமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவில் மூன்று முகாம்கள் காட்டப்படுகின்றன,அவற்றை இந்திய இராணுவத்தினர் தாக்கி அழிப்பதையும் காணமுடிகின்றது.