மரணத்திற்கு காரணமானவர்களை போதநாயகி காப்பாற்றினாரா?: சட்டம் என்ன சொல்கிறது?

திருகோணமலை பெண் விரிவுரையாளர் மரணத்தில், அவரது கணவரான வன்னியூர் செந்தூரன் என்ற நபர் மீது கடுமையான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் வைக்கப்பட்டு வருகின்றன. தமது மகளின் கொலைக்கு செந்தூரன்தான் காரணம் என்றும், உயிரிழந்த விரிவுரையாளரின் தாயார் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.

திருமண சாதகத்தை மோசடியாக கொடுத்து திருமணம் செய்தார், ஏற்கனவே திருமணமானது குறித்து கேட்டபோது மகளை தமது வீட்டுக்கே அனுப்பாமல் தடுத்து வைத்திருந்தார், போதநாயகியை மயக்கமடையும் வரை தாக்கினார், அறைக்குள் பூட்டி வைத்தார் என பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

போதநாயகியின் முகநூல் பதிவுகளும், அவர் வாழ்வில் நெருக்கடியை சந்தித்தார் என்பதை புலப்படுத்துவதை போலவே காணப்பட்டது.

இந்த நிலைமையில், வன்னியூர் செந்தூரனால் பாதிக்கப்பட்டோம் என்று சில பெண்களின் பேஸ்புக் பதிவுகளும் குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளன.

கிழக்கு பல்கலைகழகத்தில் கல்விகற்ற சமயத்தில் ஒரு பெண்ணை காதலித்து கல்தா கொடுத்தார், அது தீக்குளிப்பு வரை சென்றதென்றெல்லாம் பேஸ்புக் பதிவுகளில் குற்றம்சாட்டப்படுகிறது.

போதநாயகியின் மரணத்தின் பின், ஒவ்வொரு நாள் கடக்க கடக்க சமூக ஊடகங்களில் செந்தூரன் மீதான குற்றச்சாட்டுக்களும், எதிர்ப்புக்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் செந்தூரன் தரப்பு அது பற்றி வாய் திறக்கவில்லை. அவரது முகநூலும் இயக்கவில்லை. அவருக்கு நெருக்கமானவர்களுடன் பேசி, செந்தூரனின் கருத்தை அறியலாமென முயன்றால், அவர்களும் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள். காரணம், தம்முடையை அழைப்பிற்கும் அவர் பதிலளிக்கிறார் இல்லையென்கிறார்கள்.

ஒட்டுசுட்டானிற்கு அண்மையிலுள்ள வீட்டில் தங்கியிருக்கிறார், எப்பொழுதாவது வெளியில் காணக்கிடைக்கிறது, மற்றும்படி வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கிறார் என்கிறார்கள் பிரதேசவாசிகள்.

இந்த சர்ச்சைகளிற்குள் இன்னொரு சுவாரஸ்ய விவகாரத்தையும் வாசகர்களிற்கு சொல்லிவிட வேண்டும்.

அண்மையில் வடமாகாணசபை அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, மாகாணசபைக்குள் எழுந்த சர்ச்சையால் அவர்கள் நால்வரும் பதவி விலகியிருந்தார்கள். அந்த சமயத்தில் மாகாணசபைக்குள் நடந்த அக்கப்போர்களில் ஒரு சமயத்தில் வன்னியூர் செந்தூரனின் பெயரும் அடிபட்டது!

எப்படி?

அதற்கு முன்னர் ஒரு ப்ளாஷ்பேக்.

வடமாகாண விவசாய அமைச்சு நடத்திய உழவர் விழாவில் தென்னிந்திய கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டிருந்தார். அப்போதைய விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நிகழ்வை ஒழுங்கமைத்தார். யாழ்ப்பாணத்திலுள்ள கவிஞர் ஒருவர் வைரமுத்துவின் பயண ஏற்பாடுகள், சந்திப்புக்களை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்தார். வைரமுத்துவை சந்திக்க, தமது புத்தகங்களை கொடுத்து ஒரு புகைப்படம் எடுக்க ஈழக்கவிகள் எல்லோரும் நான் முந்தி, நீ முந்தியென போட்டி போட்டபடியிருந்தனர். பயண ஏற்பாடுகளை செய்த கவிஞரை தொலைபேசியில் அழைத்து, வைரமுத்துவை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டுமென ஈழமெங்கும் பரவிவாழும் கவிகள் வேண்டுகோள் விடுத்தபடியிருந்தனர். வைரமுத்துவுடன் பேசி, அவருக்கு நேரமிருந்தால்தான் தன்னால் ஏற்பாடு செய்து தரலாமென அந்த கவிஞர் சொல்லிவிட்டார்.

இதனால் மனமொடிந்த பல கவிகள் ஒதுங்கி விட்டனர். அரசியல் தொடர்புகள் இருந்த சில கவிகள் மட்டும் அடுத்த கட்ட முயற்சியில் இறங்கினார்கள். அதாவது தமக்கு தெரிந்த அரசியல் பிரமுகர்கள் ஊடாக நேரடியாக விவசாய அமைச்சில் பொறுப்பான அதிகாரிகளுடன் பேசி சந்திப்பிற்கான அனுமதி பெறுவதே திட்டம். அப்படி திட்டமிட்டவர்கள் இருவர். இருவருமே வன்னியூர் கவிராயர்கள்.

ஒருவர் செந்தூரன். மற்றவர் ஆயிரம் கவிதைகள் என அசால்ட்டாக அடித்தவர்.

செந்தூரனிற்காக ஒரு மாகாணசபை உறுப்பினர் பேசியிருந்தார். ஆயிரம் கவிதைக்காக கிளிநொச்சியை சேர்ந்த வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா பேசினார். எனினும், வைரமுத்து தனிப்பட்ட சந்திப்புக்களை விரும்பாத படியால் அதிகாரிகள் சந்திப்பை ஏற்பாடு செய்யவில்லை. பின்னர் நிகழ்வில் வைரமுத்து உட்கார்ந்திருக்கும்போது, அவரிடம் தமது புத்தகங்களை கொடுத்து எல்லோரும் படம் எடுத்துக் கொண்டார்கள்.

வடமாகாணசபை அமைச்சரவை சர்ச்சை ஏற்பட்டபோது, வடமாகாணசபைக்குள் இதை ஒரு குற்றச்சாட்டாகவே வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் உரையாற்றியிருந்தார். வைமுத்துவை சந்திக்க அனுமதிக்கவில்லையென வன்னியூர் செந்தூரன் தன்னிடம் முறையிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்!

சரி, இந்த விவகாரத்தில்- போதநாயகி தற்கொலை- அடுத்து என்ன நடக்கும்?

எதுவுமே நடக்காது. பேஸ்புக்கிலும், கண்டன போராட்டங்களிலும் எதிர்ப்பை வெளியிடுபவர்கள் அடுத்த வாரம் புதிய பிரச்சனைக்கு போய் விடுவார்கள். சட்டமும் இதை கையிலெடுக்க வாய்ப்பில்லை.

போதநாயகி தற்கொலை விவகாரத்தின் சட்ட விவகாரங்கள் குறித்து மூத்த சட்டத்தரணிகள் சிலருடன் பேசினோம். “போதநாயகி தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், அதன் பின்னணியில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இருப்பார்கள். அவரை தற்கொலையை நோக்கி தள்ளிவிட்டவர்கள் நிச்சயம் குற்றவாளிகள்தான். ஆனால் சட்டஅமைப்பில் அவர்களை தண்டிக்க எந்த ஏற்பாடும் இல்லை.

போதநாயகி கூட, தனது கணவனை – அவர்தான் தற்கொலைக்கு காரணமென வைத்தால்- சட்டத்தில் தண்டிக்கும் வாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார். அதை போதநாயகி திட்டமிட்டு செய்தாரா, தெரியாமல் செய்தாரா என்பது தெரியவில்லை.

தற்கொலையே ஒரு தவறான முடிவு. அதிலும், அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தாமல் மிக தவறான முடிவை எடுத்துள்ளார். ஆண்களால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்த முதல் ஆளும், கடைசி ஆளும் போதநாயகி அல்ல. மிக அண்மைய வேறு உதாரணங்களே உள்ளன. யாழ்ப்பாணத்தில் சில வருடங்களின் முன்னர் இரண்டு தற்கொலைகள் நடந்தன. இரண்டும் பெண் பிள்ளைகள். கிறிஸ்தவ மிசனரியிலுள்ள ஒருவரினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு பிள்ளை. மற்றவர் யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணிபுரிந்த பெண். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணிபுரிந்த பெண் பிள்ளை, “எனது மரணத்திற்கு இவர்தான் காரணம். நான் செய்யாத திருட்டை என் மீது சுமத்தியுள்ளார். எனது அடையாள அட்டை, தொழில் நியமன பத்திரத்தை பறித்து வைத்தார்“ என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த மரணங்கள் நடந்து சில வருடங்களாகி விட்டது. முதலாவது மரணம் தற்கொலையாக முடிந்து விட்டது. இரண்டாவது மரணம் பொலிஸ் அதிகாரிகளின் துணையுடன் அப்படியே இழுத்து மூடப்படும் நிலைமைக்கு சென்றது. நல்ல வேளையாக யாழ் நீதிவான் கூடுதல் கரிசனை காட்டி, பொலிசாரை கண்டித்து விசாரணையை குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு மாற்றியுள்ளார்.

தற்கொலைக்கு காரணமானவரை குறிப்பிட்டே இந்த நிலைமைதான் என்றால், காரணத்தையே குறிப்பிடாமல் தற்கொலை செய்து கொண்ட போதநாயகியின் மரணத்திற்கு நீதி பெற்றுக் கொடுக்கும் பொறிமுறை இங்கில்லை“ என்றார்கள்.

விரிவுரையாளரான போதநாயகி இவற்றை அறியாமலிருக்க நியாயமில்லை. சில சமயங்களில் அழுத்தங்களால் எதையும் சிந்திக்க முடியாமலிருக்கவும் வாய்ப்புண்டு. எனினும், தன்னுடைய துயரங்களை தனக்குள்ளேயே அடக்குபவராகவே போதநாயகி இருந்திருக்கிறார் என்பது தாயாரின் கருத்துக்களில் இருந்து புரிகிறது.

இன்னொரு வகையில், பெண் தற்கொலைகளிற்கு காரணமானவர்கள் இலங்கையின் சட்ட ஓட்டைகளிற்குள்ளால் தப்பிக்கும் அவலத்தை புரிந்து, காலத்தின் நீதிமன்றில் அவர்கள் நிறுத்தப்படட்டும் என்றும் அவர் நினைத்திருக்கலாம்!