சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சடலத்தை புதைத்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணியா?

சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலய வளாகத்தில் அண்மையில் ஒரு சடலம் புதைக்கப்பட்டது. உள்ளூர் மக்களின் எதிர்ப்பின் மத்தியில், நீதிமன்ற உத்தரவிற்கமைவாக சடலம் புதைக்கப்பட்டிருந்தது.

சீரணி நாகபூசணி அம்மன் ஆலய ஆதீன கர்த்தாவான தம்பையா பரஞ்சோதி கடந்த ஓகஸ்ட் முதல் வாரத்தில் உயிரிழந்திருந்தார். தனது உடலை ஆலய வளாகத்தில் புதைக்க வேண்டுமென அவர் விரும்பியதாக கூறப்படுகிறது.

ஆலயத்தின் பின்பகுதியில் அவரது உடலை புதைக்க குடும்பத்தினர் முயற்சித்தனர். எனினும், அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது மக்கள் குடியிருக்கும் பகுதி, ஆலய வளாகத்தில் சடலத்தை புதைப்பது ஆலயத்தின் புனித தன்மையை கெடுப்பதாக அமைந்து விடும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

வலி தென்மேற்கு பிரதேசசபைக்கு இது தொடர்பில் முறைப்பாடும் செய்தனர். பிரதேசசபையால் மானிப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிசார் தலையிட்டு, ஆலய வளாகத்தில் புதைப்பதற்கு தற்காலிக தடைவிதித்து, மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் விடயத்தை பாரப்படுத்தினார்கள்.

ஆலய வளாகத்தில் ஆதீன கர்த்தாவின் சடலத்தை புதைப்பதில் இரண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தீவிரமாக முயற்சித்தார்கள். ஐதேகவின் வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் ஒருவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி க.சுகாஸ் மற்றையவர்.

ஆலய வளாகத்தில் சடலத்தை புதைக்க வேண்டுமென, ஆதீன கர்த்தா சார்பில் மன்றில் முன்னிலையானார் சட்டத்தரணி சுகாஸ். சடலத்தை ஆலய வளாகத்தில் அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதித்திருந்தது.

ஆலயத்தின் புதின தன்மையை கெடுக்கும் செயற்பாடு இதுவென உள்ளூரில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.

இது தொடர்பில் இன்று காலை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூத்த தலைவர் ஒருவருடன் தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு பேசியது. “தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது சட்ட அறிவை முறையாக பயன்படுத்தவில்லை. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாக பாவிக்கிறது என குற்றம் சுமத்துகிறீர்கள். ஆனால் உங்கள் தரப்பு சட்டத்தரணி மணிவண்ணன் ஏற்கனவே வேள்விக்கு எதிராக வாதாடினார். இப்பொழுது சுகாஸ் ஆலய வளாகத்தில் சடலத்தை புதைக்க வாதாடினார். பயன்படுத்த வேண்டிய விவகாரத்தை விட்டுவிட்டு, மத விவகாரங்களிற்குள் மட்டும் செயற்படுவதாக விமர்சனங்கள் வராதா?“ என கேட்டோம்.

“உண்மைதான். இந்த விசயத்தைப்பற்றி கட்சிக்குள்ளும் பேசியிருக்கிறோம். இரண்டாம் மட்ட தலைவர்களுடனும் பேசியிருக்கிறோம். உயர்மட்டத்திலும் நாங்கள் சிலர் பேசியிருக்கிறோம். மத விவகாரங்களில்- சர்ச்சையை ஏற்படுத்தும், மக்களின் உணர்வுரீதியான விவகாரங்களில்- சட்டத்தரணிகளாக நுழையும் போது, கட்சியின் ஆலோசனையை பெற்று செயற்படுங்கள் என்ற ஆலோசனையொன்றை வழங்குவது பற்றி யோசிக்கிறோம். இப்போதைக்கு இதை செய்தியாக்கி விடாதீர்கள்“ என கேட்டுக் கொண்டார்.

நமக்கு செய்திதானே தொழில். அந்த பிரமுகர் மன்னிப்பாராக!