நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம அர்ச்சகரான சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்றின் சிறப்பு அமர்வு உறுதி செய்தது.புதன்கிழமை இடம்பெற்ற உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு குறித்து தெரியவருவதாவது,

1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி தனது மனைவியான அம்பிகா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சிவபாதசுந்தரம்பிள்ளை புவனேஸ்வரியை, சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மா நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு கொலை செய்து, ஆலய வளாகத்தில் தான் வசித்து வந்த விடுதி வளவுக்குள் புதைத்திருந்தார்.

இந்த கொலைக்கு ஆலய பூசைகளில் உதவியாளராக பணியாற்றிய வெங்கட்ராமன் பாலமுரளி சர்மா உதவியாக இருந்துள்ளார்.இவர் கொலை இடம்பெற்று ஒரு வருடத்தின் பின் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.

இதனையடுத்து ஆலய பிரதேசத்துக்கு சென்ற பொலிஸார் எதிரி வசித்து வந்த விடுதி வளவில் புதைக்கப்பட்டிருந்த அம்பிகாவின் எலும்புக் கூட்டை கைப்பற்றியிருந்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மா மீது குற்றயவில் தண்டனைக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்து சட்டமா அதிபரினால் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிரியும் முக்கிய சாட்சியான பாலமுரளி சர்மாவும் தலைமறைவாகியிருந்தனர். அவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்காக எதிரி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சென்ற போது, நீதிபதி இளஞ்செழியனின் விசேட உத்தரவின் பேரில், விமானத்தில் ஏறும் போது கைது செய்யப்பட்டார்.முக்கிய சாட்சியான பாலமுரளி சர்மாவும் சரணடைந்திருந்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றில் இடம்பெற்றது.

இதில், அரச தரப்பில் சட்டவாதி செல்வி சுகந்தி கந்தசாமியும் எதிரியின் சார்பில் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தாவும் முன்னிலையாகி இருந்தனர்.திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்று 2009ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறிக்கப்பட்ட எதிரி பிராமணக் குல குருக்கள், அவர் நாயன்மார்களால் பாடப்பெற்ற திருத்தலமான திருகோணேஸ்வர பிரதம குருக்களாக இருந்த சமயம் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட அம்பிகாவின் சடலம் புண்ணிய தலமான கோயில் வளாகத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. அவரின் சடலத்தைப் புதைத்துவிட்டு சுமார் ஒருவருடம் இரண்டு மாதகாலமாக அதே கோணேஸ்வர ஆலயத்தில் ஈஸ்வரனுக்கும் மாதுமைக்கும் குருதிக் கறை படிந்த கரங்களால் பூஜைகள் செய்து மக்களுக்கு அர்ச்சனை வழங்கியதன் விளைவாக கோயிலின் புனிதத் தன்மை எதிரியினால் கெடுக்கப்பட்டுள்ளது.

புதைக்கப்பட்ட சடலத்தின் புதைகுழியிலிருந்து கைப்பற்றப்பட்ட கழுத்து நெரிக்கப்பட்டமைக்கான கயிறு, தாலிக் கொடி, தலை மயிர், மண்டை ஓடு என்பன சான்றுப்பொருட்களாக அமைகின்றன.அத்துடன் எதிரியினால் அம்பிகா புதைக்கப்பட்ட இடம் மான் இறந்து புதைக்கப்பட்ட இடமாகும். இதன் மூலம் எதிரி ஏமாற்று செய்யும் நோக்குடன் நடந்துள்ளார்.

“கோணேஸ்வரர் பெருமாளின் அருள் பெற வந்த மக்களுக்கு குருதிக் கறை படிந்த கரங்களால் அர்ச்சனை செய்துள்ளார். மாமன்னன் இராவணனால் பூசிக்கப்பட்ட ஆலயத்தின் புனிதத் தன்மை எதிரியால் கெடுக்கப்பட்டுள்ளது. எதிரி இந்தக் கொலையைத் திட்டமிட்டுச் செய்தபோது, இருவரது சத்தத்துக்கும் இடையில் தூக்கத்திலிருந்த 1 வயதுக் குழந்தை எழுந்துள்ளது. அக்குழந்தை முன்னால் இக்கொலை இடம்பெற்றுள்ளது. புதைகுழியைத் தோண்டியமை, சடலத்தைப் புதைத்தமை முதலான குற்றங்களின் பிரகாரம் எதிரி கொலையாளி என்பது நிரூபணமாகிறது. எனவே மன்று எதிரிக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறது ” என்று நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மா, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிஸ்டார் ஜெனரல் பி.குமாரரட்ணம், எதிரிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் நியாயமானதே என்று வாதிட்டார்.இந்த நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றம் எதிரிக்கு வழங்கிய தூக்குத் தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி, எதிரியின் மேன்முறையீட்டு மனுவை நிராகரித்தது.

இலங்கை சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் ஒருவருக்கு 2 மேன்முறையீட்டு உரிமை உண்டு என்ற அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கும் ஆட்சேபனை தெரிவித்து சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மா, உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிசிர ஜே.டி அப்ரூவ், விஜித் குமார மலால்கொட, முருடு பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்தது.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிஸ்டார் ஜெனரல் பி.குமாரரட்ணம் முன்னிலையாகி எதிரிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை சரியானதே என வாதித்தார்.இந்த நிலையில் புதன்கிழமை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, எதிரியின் 2ஆவது மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, அவருக்கு மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது.