பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் 109 பேர் உயிரிழந்தனர்.!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ராமன் சர்மா எழுப்பியிருக்கும் கேள்விக்கு ராணுவ அதிகாரி ஒருவர் பதிலளிக்கையில், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் 109 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார்.

இது சம்மந்தமாக அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்திருக்கும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறல், ஊடுருவி தாக்குதல் போன்ற பல்வேறு தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இப்படி பல்வேறு தாக்குதல்கள் நடத்தியதில் இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களும் அடங்குவர். மேலும், 565 பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்தாண்டு அதிகபட்சமாக 1535 தடவையும், 2017-ல் 971 தடவையும், 2016-ல் 449 தடவையும் எல்லையில் ஊடுருவி தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் என்று தெரிவித்திருக்கின்றனர்.