தமிழக மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த இராமதாஸ்.!!

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் பா.ம.கவினர் நான்கு உயிரிழந்த சம்பவம் குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தமிழக மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்துள்ளார். இது சம்மந்தமாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, ”விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலையோர மரத்தின் மீது மகிழுந்து மோதி பா.ம.க. நிர்வாகிகள் 4 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான லட்சுமி நாராயணன் கடுமையான உழைப்பாலும், நேர்மையாலும் இளம் வயதிலேயே தொழிலதிபராக உருவெடுத்தவர். வழக்கறிஞர்கள் சக்திவேல், ஆதிமூலம் ஆகிய இருவரும் அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்க துணை நின்றவர்கள். மூவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக தத்தமது பகுதிகளில் சிறப்பாக பாடுபட்டவர்கள். அவர்களுடன் மகிழுந்தை ஓட்டிச்சென்ற நிஜாம் மொய்தீனும் உயிரிழந்தது பெரும் சோகத்தை வரவழைக்கிறது. இந்த விபத்தில் வழக்கறிஞர் சின்னய்யா, வீரப்பன், ஏழுமலை, தங்கபாண்டியன் ஆகியோர் காயமடைந்ததும் வேதனை அளிக்கிறது. அவர்கள் விரைவில் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் நான் தொடக்கத்திலிருந்தே கூறிவரும் அறிவுரையை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன். வாகனங்களில் பயணிப்பவர்கள் தங்களது வீடுகளில் தங்களுக்காக காத்திருக்கும் தாய், தந்தையர், மனைவி, மக்கள் ஆகியோரை நினைவில் கொண்டு கவனமாகவும், பாதுகாப்பாகவும் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பது தான் எனது அறிவுரை. அதைப் பின்பற்றி இனியாவது விபத்துகளின்றி பயணிக்கும்படி அறிவுறுத்துகிறேன்” என்று அந்த அறிக்கையில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்