நாமும் கைதிகள் தான்……
வித்தியாவை” வீணாக்கி
“சேயாவை” சிதைத்து
“நந்தினியை”நாசமாக்கி
ஒன்றுமறியா எங்கள்
செல்ல மகள் “ஹாசினியை” தின்று
இன்னும் எத்தனையோ பூக்களை கொன்றொழித்த அத்தனை காமுகர்களையும் என்ன செய்தோம் நாம் ??
பெண் மகவாய் இவள் பிறந்தது குற்றமா??
பெண் பிள்ளை வேண்டுமென
இவளை பெற்றது குற்றமா?
சிறு மொட்டொன்று மலரும் முன்னே அதன் இதழ்களை கூட பிய்த்தெறிய மனம் வரா மனிதர்களுக்கு மத்தியில் ….
மொட்டென்ன? பூவென்ன? அத்தனையும் எம்மால் தான் அழிக்கப்பட வேண்டும் என கங்கணம் கட்டித்திரியும் காடையர்களே………
எங்கிருந்தடா வந்தீர்கள் நீங்களெல்லாம் ?
தாயின்றி , தங்கையின்றி , தாரமுமின்றி தான் தரணியில் வாழ்கின்றீரோ???
விழுந்த பல் கூட சரியாக முளைத்திராத அந்த சின்னஞ்சிறு மொட்டு
அப்படி என்னதான் செய்து விட்டது உனக்கு?
கள்ளமில்லா சிரிப்பை கண்ணுக்குள்ளே வைத்திருந்தாயே ஹாசினி குட்டியே..
வெள்ளை உள்ளத்தால் வித்தைகள் பல புரிந்தாயே ……
அத்தனையும் உன் உடலுடன் சேர்ந்து
கருகிப்போனதன் காரணம் தான் என்னவோ??
உன் நற்குணங்களில் ஒன்றாவது அழிக்கும் சக்தியாய் மாறியிருக்க கூடாதா??
அப்பிணம் தின்னும் கழுகு உன்னை சிதைக்கையிலே …….
உன்னை யாரென்றும் அறிந்திராத எமக்கு கூட ..
உன் இறப்பு எத்துணை துன்பத்தையம்மா தருகிறது?
ஓ…மன்னித்து விடு மகளே ….
இது இறப்பல்ல “சிதைப்பு” .
நாமெல்லாம் உனக்காக கலங்கினாலும் …..
நான்கு வரிகளை எழுதினாலும் …
அவையெல்லாம் அர்த்தமற்றவையே ..
இப்பொழுது நீ இறைவனடியில் இருப்பதால்
உன்னிடம் நாம் ஒன்று இறைஞ்சுகின்றோம் ..
மறுபிறப்பென்ற ஒன்று உண்டென்றால் …..
மீண்டும் மண்ணுக்கு வா ..
மகளாய் வாழ்வதற்கல்ல……
உன்னை சிதைத்தவனையும்
உன் சகோதரிகளை நாசம் செய்தவர்களையும் வதம் செய்து பெண் இனத்தை காக்கும் தெய்வமாய்……
ஹாசினி கடவுளாய் ………..
உன்னை காண ஆசை கொள்கிறோம் ….
வருடம் ஒன்றாகி விட்ட்து, உன் கதை கேட்டு, இன்று நீயும் இல்லை, உன் கதையும் இல்லை சகோதரியே….
நான் கவிஞருமல்ல,இது கவிதையுமல்ல…….
அன்பெனும் கூரிய ஆயுதத்தால்
கொடூரமாக தாக்கப்பட்ட
ஒரு பெண்ணின் புலம்பலும் கண்ணீரும்…..
பெண்ணாய் பிறந்ததொன்றே யாம் செய்த பெரிய பாவம் என
சில பெண்கள் புலம்பிய போது
பெரிதாக உணரவில்லை
அதன் அர்த்தமதை….
அர்த்தமது ஆழமாக உணரப்பட்டதால்
இப்போது இயம்புகின்றேன்…..
“நல்லவன்” என்ற தகுதி மட்டுமே போதுமாயிருந்தது….
நான் உன்னை தேர்ந்தெடுப்பதற்கும்
நீ என்னுள் நிரந்தரமாய் ஐக்கியமாவதற்கும்….
அத்தகுதியும், உன் மேல் கொண்ட அளவு கடந்த நம்பிக்கையுமே
இன்றென்னை அணுஅணுவாய்
கொல்கிறது……
அதீத அன்பு அருகதையற்றோர் மீது
காட்டப்படுவதால் தானோ என்னவோ
அது ஆயுதமாய் எம்மீது எறியப்படுகிறது…
அன்பே உருவானவர்கள் நாமெல்லோரும்…
இதில் ஆணென்ன பெண்னென்ன
சமத்துவமறிந்து சமமாய் நடத்த தெரியாதெனின் அவர் மானிடரே அல்லர்.
உங்களுக்கு உண்மையாய், உயிராய்
இருக்கும் பெண்ணவளை
உயர்வாய் எண்ணாவிடினும்
ஓர் உயிருள்ள ஜீவனாய் உணர்வுள்ள உயிராய் மதியுங்கள்…
அவள் உயிர் பிரியும் வேளையிலும்
உன்னை எண்ணி மட்டுமே கலங்குவாள்…
மாறாக அவளை கள(ல)ங்கப்படுத்த எண்ணினால், இப்பிறவியிலல்ல எப்பிறவியிலும்
எல்லையில்லா அவள் அன்பை
எள்ளளவும் பெற மாட்டீர் என்பது
திண்ணம்…