அமெரிக்காவில் பட்டப்பகலில் 3 வயது குழந்தையின் முன்னிலையில் அதன் தந்தையை கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரின் பிராங்க்ஸ் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தமது 3 வயது குழந்தையுடன் பிராங்க்ஸ் பகுதியில் உள்ள பல்கலைக்கழக அவென்யூ வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அவரை வெகு நேரமாக 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று தொடர்ந்து வந்துள்ளது. திடீரென்று அந்த கும்பலில் ஒருவன் அந்த நபரின் குழந்தையை வெடுக்கென்று பிடுங்கவும்,
எஞ்சியவர்கள் துப்பாக்கியை எடுத்து அந்த நபர் மீது சரமாரியாக சுட்டுள்ளனர். இதனையடுத்து உடனடியாக அங்கிருந்து அந்த கும்பல் தப்பியுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த நியூயார்க் நகர பொலிசார் குண்டடிப்பட்டு சரிந்த நபரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறுமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது அந்த கும்பல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், பொதுமக்களின் உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.