”திருமணமான ஆணோ, பெண்ணோ பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் தாண்டிய பாலுறவு வைத்துக்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகாது” – இது நேற்றைக்கு முன் தினம் உச்சநீதிமன்றம் 497 சட்டத்தை திருத்தி வழங்கிய தீர்ப்பு. இந்தத் தீர்ப்புக் குறித்து இயக்குநர், நடிகை மற்றும் குடும்பப் பிரச்னைகளை அலசி, ஆராய்ந்து ரியாலிட்டி ஷோ நடத்தியவருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் கருத்து கேட்டோம்…
”ஒரு சட்டமோ அல்லது சட்டத் திருத்தமோ, சாதக பாதகங்களை யோசித்துத்தான் நீதிபதிகள் தீர்ப்பு சொல்லியிருப்பார்கள். அதனால், அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும். அதன்படி நானும் அந்தத் தீர்ப்பை மதிக்கிறேன்.
அதே நேரம், ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற ஷோவை பல வருடங்கள் நடத்திய அனுபவத்தில், இதனால் சமூகத்தில் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய பிரச்னைகளை என்னால் முன்கூட்டியே உணர முடிகிறது” என்றபடி பேச ஆரம்பித்தார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
”தகாத உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தண்டனையை ரத்து செய்திருக்கிறார்கள். 497 சட்டப்படி பெண்களுக்கு தண்டனை இல்லாததால் ஆண்களுக்கும் தண்டனை இல்லாதது சரிதானே என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை,
யார் செய்தாலும் தவறு, தவறுதான். சட்டத்தின் முன் ஆணென்ன, பெண்ணென்ன… ஆணும், பெண்ணும் சமம் என்கிற நாம் இதையும் அப்படிப்பார்ப்பதுதான் எனக்கு சரியாகப்படுகிறது.
ஒரு திருமண வாழ்க்கையில் உனக்கு நான், எனக்கு நீ என்றுதான் நுழைகிறோம். இந்தப் பிணைப்பில் இருந்து மீறுவது என்னைப் பொறுத்தவரை துரோகம். வேறு வழியே இல்லை என்றால், சட்டப்படி விவாகரத்து வாங்கிவிடுங்கள்.
ஒரு போன் போதும் ஒரு குடும்பத்தை கெடுப்பதற்கு என்ற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பல பெண்கள் தாங்கள் தவறிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் வலைதளங்களின் வழியாக விழுந்துகொண்டிருக்கிறார்கள்.
அதனால், திருமணம் தாண்டிய உறவில் இருக்கிற ஆணோ, பெண்ணோ அதைவிட்டு மீண்டு வரப் பாருங்கள். திருமணம் தாண்டிய உறவுகள் குடும்ப அமைப்பை ஆணிவேரோடு அழித்துவிடும்.
தனி மனித விருப்பம் என்று அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என்று சென்றுவிட்டால், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் நிலைமை என்னவாகும்… இதற்கு நம்மிடம் பதில் இருக்கிறதா? என் விருப்பப்படியெல்லாம்தான் வாழ்வேன் என்பவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாதீர்கள் அல்லது குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ளாமல் இருங்கள்.
திருமணம் தாண்டிய உறவு, சட்டப்படி கிரிமினல் குற்றம் கிடையாது என்பதின் உண்மையான அர்த்தத்தை, பகுத்தறிவுக் கொண்டவர்களும், சட்டம் குறித்த விழிப்புஉணர்வு கொண்டவர்களும் புரிந்துகொள்ளலாம். இந்தப் பகுத்தறிவு எல்லோருக்கும் இருக்குமா என்ன?
நம் நாட்டில் இன்னமும் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு உத்தரவாதம் இல்லாத, கணவனைத் தவிர வேறு உலகமே தெரியாத கோடிக்கணக்கான பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பெண்களுடைய கணவர்கள், தனி மனித உரிமை என்று குடும்பத்தைவிட்டு பிரிந்து வேறொரு பெண்ணின் பின்னால் போய்விட்டால், அந்த மனைவிகளின், குழந்தைகளின் நிலைமை என்ன?
வயிற்றில் ஒன்று, இடுப்பில் ஒன்று, கையில் ஒன்று என்று மூன்று குழந்தைகளுடன் மனைவி கண்ணீர்விட்டுக் கொண்டிருப்பாள். கணவனோ, வேறு ஒரு பெண்ணை தேடிப் போயிருப்பான். (அந்தப் பெண்ணும் திருமணமானவள் என்றால் இன்னொரு குடும்பமும் அங்கே உடைந்து போகும்) காரணம் சிம்பிள், அவனுக்கு மனைவி சலித்துப்போயிருப்பாள்.
என்னுடைய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் இப்படிப் பல அபலைப் பெண்களைச் சந்தித்திருக்கிறேன். குழந்தைகளை வைத்துக்கொண்டு அந்தப் பெண்கள் வேலைக்கும் போக முடியாது,
அவளுடைய பெற்றோர்களும் மகளையும் பேரப்பிள்ளைகளையும் தாங்குகிற அளவுக்குப் பொருளாதார பலத்துடன் இருக்க மாட்டார்கள். சரி, காவல்துறையில் புகார் சொல்லியாவது கணவரைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்றால், அதையும் இனிமேல் செய்ய முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். கணவன் துணையில்லாமல், விவாகரத்தை மட்டும் வாங்கி கையில் வைத்துக்கொண்டு பெண்கள் என்ன செய்ய முடியும்? ”