விக்கி தனிவழி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாண சபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில்,

“எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்ப, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் விமர்சிக்கப்படுகின்றேன்.

முரண்பாட்டு அரசியலைத் தொடர நான் விரும்பவில்லை. எனக்கு அளிக்கப்பட்ட ஆணையின்படியே செயற்பட்டிருக்கிறேன். எனது ஆற்றலைக் கொண்டு, அதனைச் செய்திருக்கிறேன்.

எமது மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவதற்கு முன்னர், அதன் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவேன்” – என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, புதிய கூட்டணியை அமைப்பது குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றது எனவும், அவரிடம் இருந்து தமக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.