தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அதிமுக ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் அதிமுக எம்எல்ஏக்கள் மூவரை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அதிமுகவினர் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதிமுக அரசுக்கு ஆதரவளித்து வரும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன் ஆதரவு நிலையில் உள்ளார்கள்.எம்எல்ஏக்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய மூவரும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களுடன் சேர்த்து அண்மையில் சர்ச்சையில் சிக்கிய கருணாஸ் உள்ளிட்டோரின் பதவியையும் தகுதி நீக்கம் செய்யவும் தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் தற்சமயம் அவசர அவசரமாக இதுகுறித்து ஆலோசனையை தினகரன் தனது வீட்டில் நடத்தி வருகிறார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் தினகரன் வீட்டிற்கு வந்துள்ளார். தினகரன் தரப்பு முன்னணி தலைவர்களான தங்கதமிழ்செல்வன் வெற்றிவேல் உள்ளிட்டோரும் தினகரன் இல்லத்திற்கு வந்துள்ளார்கள்.
இதனால் தமிழக அரசியலில் மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.