சட்டவிரோத கட்டட நிர்மாணங்களால், யாழ்ப்பாணம் முழுவதும் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ள அதேவேளை, நிலத்தடி நீரும் இல்லாமல் போகும் அபாயமுள்ளதாக, சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில், தொடர்ந்து கருத்துரைத்த அவர், யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிலர், யாழ்ப்பாண நகரத்தில், மாநகர சபையின் அனுமதியில்லாது கட்டடங்களை நிர்மாணித்ததாகவும் இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களால், வௌ்ள நீர் ஓடுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட கால்வாய்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இன்றும் இவ்வாறான அனுமதியற்ற கட்டட நிர்மாணங்கள் பல யாழ்.நகரில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதனால், மழை காலத்தில் வௌ்ளம் கடலுக்குச் செல்ல முடியாதபோது, ஒட்டுமொத்த வௌ்ள நீரும் பொம்மைவௌிப் பிரதேசத்திலேயே தேங்குமெனக் குறிப்பிட்டதுடன், இது தெரியாமல், அரசியல்வாதிகள் அங்கு குடியேற்றங்களை மேற்கொண்டுள்ளதால், இன்று அப்பகுதி மேடாக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால், யாழ்ப்பாணத்தில் பெரும் மழை பெய்யும் பட்சத்தில் அப்பகுதி மக்கள் மாத்திரம் பாதிக்கப்படபோவதில்லையெனவும் மாறாக, யாழ்ப்பாணம் முழுவதுமே, வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.