ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 இஸ்லாமியர்கள் இந்து மதத்துக்கு…

தனது இனத்தவர் தங்களை ஒதுக்கி வைத்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 இஸ்லாமியர்கள் இந்துவாக மதம் மாறி உள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரின் அருகில் உள்ள பாதரைகா கிராமத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வந்தனர். அந்த குடும்பத்தில் குடும்பத்தலைவர், மகன், மகள், பேரன்,பேத்திகள் என 20 பேர் இருந்தனர். குடும்பத்தலைவரான அக்தர் அலி என்னும் 68 வயது முதியவருடைய மகன்களில் ஒருவர் குதாசன்

குதாசன் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி கொல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் பிணத்தை தூக்கிலிட்டது போல் தொங்க விட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடம் அக்தர் அலி பல முறை புகார் செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. அத்துடன் அவர் தனது இனத்தவர்களிடமும் இது குறித்து உதவி கோரி உள்ளார். அவர்களும் உதவ மறுத்துள்ளனர்.

அதன் பிறகு ஒரு இஸ்லாமிய ஜமாத் எனப்படும் பஞ்சாயத்தில் அக்தர் முறையிட்டுள்ளார். அங்கு அவர் கூறியதை ஏற்காமல் அவரை கொடுமைப்படுத்தியதாக அக்தர் தெரிவிக்கிறார். தனக்கு நீதி கிடைக்காததால் அக்தர் அலி தனது குடும்பத்தினர் 13 பேருடன் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்துவாக மதம் மாறி உள்ளார்.

இந்து யுவ வாகினி என்னும் இந்து அமைப்பினர் உள்ளூர் கோவிலில் இவர்களுக்கு நேற்று முன் தினம் மத மாற்ற சடங்கை செய்து வைத்துள்ளனர். அப்போது மந்திரங்களுடன் வந்தே மாதரம் பாடலும் இசைக்கப்பட்டுள்ளது. அமைப்பின் மாவட்ட தலைவர் யோகேந்தர், “இது மதமாற்றம் அல்ல. மதம் திரும்புதல். சுமார் 5, 6 தலைமுறைக்கு முன் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு சென்றவர்கள் தற்போது தாய் மதத்துக்கு திரும்பி வந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை சூப்பிரண்ட் சைலேஷ் குமார், “அந்த குடும்பத்தினர் தங்கள் உறவினர் நால்வர் மீது மகனைக் கொன்றதாக புகார் அளித்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை அவர்கள் சொல்வதுடன் ஒத்துப் போகவில்லை. ஆயினும் அவர்கள் புகாரின் அடிப்படையில் புகார் பதியப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை ஒரு மருத்துவ நிபுணரிடம் அனுப்பப் பட்டுள்ளது. அவர் முடிவு தெரியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.