குருப் பெயர்ச்சி நட்சத்திரத்திற்கு என்ன அதிர்ஷடம்??

இந்த குருப்பெயர்ச்சி குரு பகவான் செவ்வாயினுடைய வீட்டிற்கு மாறி இருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சி இன்று முதல் தொடங்குகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. குருப்பெயர்ச்சிக்கான நட்சத்திரப் பலன்களைத் துல்லியமாகக் கணித்துத் தந்துள்ளார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.

அஸ்வினி

இந்த குருப் பெயர்ச்சியால் பொதுவாக வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியிடங்களில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். திருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை முதலானவை அகலும். சுப காரியங்கள் அனைத்தும் இனிதே நடந்தேறும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை வரவேண்டிய பணம் வந்து சேரும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.

பரணி

இந்த குருப் பெயர்ச்சியால் உங்களுக்குத் தொழிலில் ஏற்றம் உண்டு. குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலையில் தொய்வு இருந்திருந்தால், அவர்கள் முன்னேற குரு பகவான் அருள்புரிவார். தந்தையாருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்களை ஏமாற்றுபவர்களைக் கண்டறிவீர்கள். ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செயல்படும் எண்ணம் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

கிருத்திகை

இந்த குருப் பெயர்ச்சியால் தந்தைக்கும் உங்களுக்கும் இருந்த பகைமை உணர்வு மாறும். தொழிலிலும் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் தந்தை வழி உறவினர்களால் இருந்த சில பிரச்சினைகள் அகலும். தொழில் செய்பவர்கள் காரியங்களை நீங்களே முன்னின்று நடத்துவதால் இடைத்தரகர்களால் ஏற்படும் விரயத்தையும் குறைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதிக முதலீடு செய்யாமல் தொடங்குவதற்கான சூழல் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதியாக வேலை செய்யும் சூழல் உருவாகும். உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

ரோகிணி

இந்த குருப்பெயர்ச்சியால் குடும்ப நிம்மதியும், லாபமும் அமையப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்களை அவமானப் படுத்தியவர்கள் எல்லாம் உங்களை ஆச்சரியமுடன் பார்க்கும் காலமாக இது இருக்கும். தொழிலைப் பொருத்தவரை இதுவரை இருந்து வந்த மந்தநிலையில் இனி ஓரளவிற்கு முன்னேற்றத்தை காணலாம். உத்தியோகத்தில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும் பதவி உயர்வுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் சிலருக்குத் தீரும்.

மிருகசீரிஷம்

இந்த குருபெயர்ச்சியைப் பொருத்தவரை நீண்டநாட்களாக இருந்த கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்தில் ஆடை, ஆபரணம், வாகனம் முதலான நீங்கள் எதிர்பார்த்திருந்த அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டி வரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நிலுவையில் இருந்த பாக்கி வசூலாகும். மாணவர்களுக்கு நட்பு வட்டாரம் அதிகரிக்கும்.

திருவாதிரை

இந்த குருப் பெயர்ச்சியால் தொழிலால் நன்மை நடக்கும் என்பதில் ஐயமில்லை. குடும்பத்தில் மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் இருந்து வந்த சச்சரவுகள் சமாதானத்தில் முடியும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த தடைகள் அனைத்தும் மாறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பண விஷயங்கள் சீராகும். அடிக்கடி விடுப்பு எடுக்காமல் வேலையை செவ்வனே செய்து முடித்து நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். உடலுக்கு அவ்வப்போது மருத்துவச் செலவுகள் தேவையில்லாமல் வந்து கொண்டுதான் இருக்கும். உடனே கவனித்தால் பெரிய பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

புனர்பூசம்

இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்குக் காட்டும் விதமாக அமையும். குடும்பத்தில் அனைவரும் உங்களை மதித்து, உங்கள் பேச்சுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இதுவரை இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் உங்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்திருப்பீர்கள். அவை இப்போது உங்களுக்கு விரும்பியபடியே கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலர் பாதியில் நிறுத்திய படிப்பைத் தொடரவும் வாய்ப்பு கிடைக்கும்.

பூசம்

இந்த குருப்பெயர்ச்சி பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து முடிவு செய்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். தொழிலில் உழைப்புக்கேற்ற பிரதிபலனுக்காக போராட்டங்களைச் சந்தித்த நீங்கள் தற்போது அதற்கான பலனை பெறப்போகிறீர்கள். உத்தியோகஸ்தர்கள் உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இதுவரை நீங்கள் அடைந்த மனக்கஷ்டம் இனி தீரும்.

ஆயில்யம்

இந்த குருப்பெயர்ச்சியால் அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் செய்பவர்கள் கடல் தாண்டி சென்று வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடம் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பெண்களுக்கு குடும்பத்தில் உங்களைப் புரிந்து நடந்து கொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

மகம்

இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு பாக்கியத்திற்கு குறைவிருக்காது. முக்கிய நிகழ்வுகளில் நீங்கள்தான் முக்கியஸ்தர்களாக இருப்பீர்கள். குடும்பத்தில் ஐஸ்வர்யத்துக்குக் குறைவிருக்காது. திருமண யோகம்,. குழந்தை பாக்கியம், புது மனை வாங்குதல், வாகனம் வாங்குதல் முதலான சுப காரியங்கள் வரிசையாக நடக்கும். பண வரவு சீராக இருக்கும். தொழிலில் சிறப்பான லாபத்தை அடையப் போகிறீர்கள். சரியான முறையில் முதலீடு செய்வீர்கள், உங்கள் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்துடன் இருந்த வந்த சில சச்சரவுகள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு கணவனுடன் இருந்துவந்த சில மனக்குழப்பங்கள் தீரும்.

பூரம்

இந்த குருப்பெயர்ச்சியால் வாழ்வில் நிறைய அனுபவங்களை சந்திக்கப் போகிறீர்கள். பலரின் நட்பும் உங்களுக்கு கிடைத்து அதில் நல்ல செயல்களைச் செய்து நிரூபிக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் திருமணத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். தொழிலில் உங்களின் உயர்வு சிறப்பாக இருக்கும். தைரியமாக எதையும் கையாளுவீர்கள். மனதுக்குள் ஒரு இலக்கை வைத்து அதை நோக்கி ஓடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, மேலிடம் உங்களின் மேல் வைத்திருந்த தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் அமையும்.

உத்திரம்

இந்த குருப் பெயர்ச்சியால் நல்ல சுமூகமான வாழ்க்கையை வாழப் போகிறீர்கள். சுபச் செய்திகள் வரும். உண்மையான உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சுமூகமான உறவு இருக்கும். இதனால் உங்களுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும். தொழில் செய்பவர்களுக்கு சில சவாலான சூழ்நிலைகள் அமையும். ஆனாலும் குருபகவானின் துணையால் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இதனால் உங்கள் புகழ் மட்டுமின்றி தொழிலும் லாபத்தை நோக்கி உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வேலையில் இருந்து இடையே நின்றவர்கள் மீண்டும் தொடருவார்கள்.

ஹஸ்தம்

இந்த குருப் பெயர்ச்சியால் பொதுவாக நிம்மதி கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் சில ஆதாயங்களையும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், கணவன் – மனைவியிடையே சரியான புரிதல் இல்லாமை போன்ற பிரச்சினைகளை சந்தித்து வருகிறீர்கள். இவை அனைத்தும் இந்த குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மாறும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்டிருந்த தொய்வுகள் அகலும். நிறைய போராட்டத்திற்கு பிறகு நல்ல செய்திகள் தொழிலில் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் கவனமாகப் பழகவும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் போது கவனம் அவசியம்.

சித்திரை

இந்த குருப் பெயர்ச்சியானது தொழிலில் ஏற்பட்ட தடங்கல்களை தகர்க்க அடிகோலாக அமையும். சில சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகுங்கள். குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து நடந்து கொள்வார். தாய்வழி உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் அகலும். குடும்பத்துடன் சேர்ந்து சில ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலைப் பெருக்குவதற்கான நிதி வசதிகள் நிதி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நீங்களே முன் சென்று என்னால் செய்ய முடியும் என்று உறுதி கொடுக்காதீர்கள். உங்களுக்கென்று கொடுக்கும் வேலையைச் சரியாகச் செய்தாலே நலம்.

சுவாதி

இந்த குருப் பெயர்ச்சியானது உங்களுக்கு பலவிதமான லாபத்தை அள்ளித்தரப் போகிறது. அதற்கு உங்கள் முயற்சியை மேலும் இரட்டிப்பாக்குங்கள். குருபகவான் உங்களுக்கு நன்மையை அளிப்பார். தாயின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தினால் சிறு உடல் உபாதைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளின் வளர்ச்சி பற்றி அவ்வப்போது கவலை வந்து போகும். கணவன் – மனைவி அன்பு அதிகரிக்கும். தொழில் செய்து கொண்டிருந்தவர் களுக்கும், புதிதாக தொழில் தொடங்குவதற்கும் பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பண விஷயத்தைப் பொருத்த வரை கவலை வேண்டாம். அலுவலகத்தில் உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும்.

விசாகம்

இந்த குருப்பெயர்ச்சியால் பலவித நன்மைகள் உங்கள் வாழ்வில் நடக்கப் போகிறது. உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் அகலும். குடும்பத்தைப் பொருத்தவரை கணவன் – மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் விலகி இன்பமாக வாழ வழிபிறக்கும்.தொழிலைப் பொருத்தவரை சற்று மந்தநிலை காணப்பட்டாலும் சில வெற்றிகள் உண்டாகும். தந்தையார் தொழிலை கவனித்து வரும் அன்பர்களுக்கு நல்ல லாபம் உண்டாக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பிரச்சினைகள் வந்து போகும். நம்பிக்கையாக யாரிடமும் எதையும் சொல்ல வேண்டாம். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வரன்கள் அமையப் பெறுவீர்கள்.

அனுஷம்

இந்த குருப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்வில் சந்தோஷமும், முன்னேற்றமும் அடையப் போகிறீர்கள். சிலர் வாழ்வில் முக்கிய கட்டங்களை சந்திக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் தந்தை வழியே வர வேண்டிய சொத்துகள், பிதுர் ராஜ்ஜிய சொத்துகளிலிருந்த பாகப் பிரிவினைகள் போன்றவை எந்த பிரச்சினையின்றி தீரும். வழக்குகள் ஏதாவது நடைபெற்றுக் கொண்டிருக்குமாயின் அது இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு சாதகமான தீர்ப்புகளாக அமையும். தொழில் செய்பவர்கள் சில முக்கிய முடிவுகளை தந்தையின் ஆலோசனையின்படி கேட்டு முடிவு எடுப்பது உங்களுக்கு நன்மையைத் தரும். உத்தியோகஸ்தர்களில் வெளிநாடுகளுக்குச் செல்ல நினைக்கும் அன்பர்கள் இப்போது அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

கேட்டை

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எல்லாவித வளங்களையும் பெற குருபகவான் அருள் செய்கிறார். வாழ்வில் முக்கியமான கட்டங்களை தெரிந்து கொள்வீர்கள். குடும்பத்திலிருப்பவர்கள் அனைவரும் உங்கள் பேச்சுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது அதற்கான பாக்கியம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைப்பதற்காக அதிகமான வேலைப்பளுவை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

மூலம்

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சுப விரயங்களைத்தான் ஏற்படுத்தும். புதிய வீடு கட்டி குடி பெயருவீர்கள். இல்லத்தில் சுப நிகழ்வுகள் அதிகமாக நடைபெறும். தந்தையாரின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். தொழிலில் இருந்து வந்த தடைகள் அகலும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான லாபத்தை குரு பகவான் வாரி வழங்கி விடுவார். புதுத் தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனப் பழுதுகள் வரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி சாதகமாகவே இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.

பூராடம்

இந்த குருப்பெயர்ச்சி எதையும் யோசனையுடன் செயல்படுவதற்கு அறிவுறுத்தும். நல்ல புத்திக் கூர்மை ஏற்படுவதற்கு குருபகவான் வழிவகை செய்வார். குடும்பத்தில் பழைய கடன்கள் அடைக்கப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான நிதி உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். உங்கள் உடல்நிலையால் சில காரியங்களைத் தள்ளிப்போட்டு வந்த நிலை மாறி சுறுசுறுப்புடன் செயல்பட்டு அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடல் ஆரோக்கியக் குறைவு அல்லது சில பிரச்சினைகளால் வேலைக்குச் செல்லாமல் இருந்தவர்கள் இப்போது வேலைக்குச் செல்வார்கள்.

உத்திராடம்

இப்போதைய குரு பகவான் மாற்றத்தால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடையப் போகிறீர்கள். சிலருக்கு நல்ல வேலை மாற்றம்,தொழில் மாற்றம் வரப் போகிறது. குடும்பத்தில் இவ்வளவு காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர்களுக்கு இப்போது முன்னேற்றம் உண்டாகும். தொழில் சூடு பிடிக்கும். லாபமடைவீர்கள். வீண் அலைச்சல் இருந்து கொண்டே இருந்த நிலை மாறும். வர வேண்டிய பணம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை இடத்தில் ஏற்பட்டு வந்த சில தொடர் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வேலையை விட்டவர்களும் இப்போது தொடருவார்கள். பெண்களுக்கு புத்திர பாக்கியம் மற்றும் திருமணத்தில் இருந்த தடைகள் விலகும்.

திருவோணம்

இந்த குருப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் ஒவ்வொரு பொன்னான தருணத்தையும் உங்களுக்கு உணர்த்தும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். அது சம்பந்தமான வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். கணவன் – மனைவி இடையே இருந்த மனஸ்தாபங்கள் அகலும். தொழில் – வியாபாரம் எப்போதும் போல் இருக்கும் என்றாலும் உங்களின் இடைவிடாத முயற்சியால் லாபம் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அதிர்ஷ்டத்தால் சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளியில் கொடுத்த பணம் சில அலைச்சல்களுக்குப் பின் கிடைக்கும்.

அவிட்டம்

இந்த குருப்பெயர்ச்சியால் உங்கள் சந்ததிகளுக்கு வேண்டியதைச் செய்ய அருள் புரிகிறார். நீண்ட நாட்களாக அவர்கள் விரும்பியதை இப்போது செய்யப் போகிறீர்கள். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த விஷயங்கள் இப்போது நடைபெறும். தொழில் செய்பவர்கள் தேவையில்லாமல் உங்கள் தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியருடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

சதயம்

குருபகவானின் அருளால் உங்களுக்கு வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய அனைத்தும் தவறாமல் கிடைப்பதற்கு வழி செய்யப் போகிறார். குடும்பத்தில் மற்றவர்களிடம் தேவையில்லாமல் கருத்து சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது. மன சங்கடங்கள் வர வாய்ப்பு உள்ளது. தொழிலில் நீங்கள் கவனமுடன் செயல்பட்டால் எந்த வித நஷ்டமும் இல்லாமல் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு முக்கிய விஷயங்களில் அனைவரிடமும் கருத்து கேட்டாலும் தீர ஆலோசித்து முடிவெடுப்பது உங்களுக்கு வெற்றியைத் தரும்.

பூரட்டாதி

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வித இன்னல்களையும் களையப் போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. வழக்கு விவகாரங்களில் உங்களுக்குத்தான் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். உங்கள் பேச்சைக் கேட்காதவர்களும் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். தாயார் தாய் வழி உறவினர்கள் உங்களுடன் உறவாட வரலாம். அவர்களுடனான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். தொழில் – வியாபாரத்தைப் பொருத்தவரை சில புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். அவை பிற்காலத்தில் லாபம் தரக்கூடியனவாகவே இருக்கும். கவலை வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்திருந்த கடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சில காலம் வெளியூரில் தங்க நேரிடலாம்.

உத்திரட்டாதி

இந்த குருப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். குருபகவானை நீங்கள் தொடர்ந்து வழிபட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண முடியும். குடும்பத்தில் தாயாரின் உடல்நிலையில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். உங்கள் மனதில் இருந்து வந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு செய்வீர்கள். உங்களுக்குப் போட்டியாக இருந்த அனைவரும் விலகி விடுவார்கள். புதிய கட்டிடங்கள் கட்டுதல், பெரிய கடைகளை வாடகைக்கு எடுத்தல் போன்ற செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடல்நிலையில் இருந்து வந்த பின்னடைவு சரியாகும். சக பணியாளர்களால் ஏற்பட்ட சில அவமரியாதைகள் சரியாகும்.

ரேவதி

இந்தக் குருப்பெயர்ச்சியால் ஆனந்தமாகவும், எதிர்காலத்தில் சுபிட்சமாகவும் இருக்க குருபகவானின் பார்வை உங்களுக்கு கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் சுப விரயங்களான வீடு, மனை, வாகனம், திருமணம் முதலான செலவுகள் இருக்கும். எதிர்பார்க்காமல் சில செலவுகள் உண்டாகும் என்றாலும் அவை அனைத்தும் முதலீடுகளாகவே அமையும். முக்கிய முடிவுகளை குடும்பத்தில் நீங்களே எடுப்பீர்கள். தொழிலில் உங்கள் காரியங்களுக்குத் தடையாக இருந்தவர்கள் அனைவரும் விலகி விடுவார்கள். நீங்கள் நிம்மதியாக தொழிலில் முன்னேறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். சிலருக்கு எதிர்பார்த்திருந்த கடன் தொகை கிடைக்கும். அவற்றை சுபகாரியங்களுக்குப் பயன்படுத்துவீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.